தகுதியுள்ள ஜனநாயக விழுமியங்களை பேணக்கூடிய இளம் பெண்கள் அரசிலுக்கு முன்வர வேண்டும்.



https://youtu.be/JM12hoBI5tg  
ஜனநாயக விழுமியங்களை  மதிக்கின்ற தகுதிவாய்ந்த இளம் பெண்கள் அரசியலில் பிரவேசிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று செவ்வாக்கிழமை 23 வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வானது வவுனியா மாவட்ட உள்ளுராட்சி மன்றங்கள் சில பெண் பிரதிநிதிகள்  இவ் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர்.

குறிப்பாக உள்ளுராட்சி மன்றங்களில் 25 வீதமான இட ஒதுக்கீட்டை பெண்களுக்கு வழங்க வேண்டியதன் அவசியம் 2018 ஆம் ஆண்டு சட்ட ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டிருந்த்து இருப்பினும், குறித்த 25வீத ஒதுக்கீட்டை முழுமையாக பெற்றுக்கொள்வதிலும் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன.

 வவுனியா மாவட்டத்தில் மொத்தமாக 25 பெண் பிரதிநிதிகள் உள்ளனர்.  இது மொத்த  உறுப்பினர்கள் தொகையில் 22 வீதமாகும். இந்நிலையில் பெண் பிரதிநிதித்துவத்தை ஊக்குவிக்கும் முகமாக பெண் வேட்பாளர்களை ஊக்கப்படுத்தும் திட்டத்தை நாம் கட்சி பேதமற்ற முறையில் முன்னெடுக்க முன்வரத் திட்டமிட்டுள்ளதாக  ஊடக  சந்திப்பில் கலந்து கொண்ட  பெண் பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,  

2018 ஆண்டு சட்ட மூலம் அமுலுக்கு வந்ததன் பின்னர் அரசியலில் பிரவேசிக்கும் வாய்ப்பு எமக்கு கிடைத்தது. பெரும்பாலான பெண்கள் இதனை ஒரு மகத்தான வாய்ப்பாக கருதினாலும்    சில பெண்கள் சட்ட நிர்ப்பந்தத்தால் சந்தர்ப்பவசமாக அரசியலில் பிரவேசித்தனர். என்றாலும் மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் அரசியலில் களமிறங்கி பிரதிநிதிகளாகச் செயற்பட்டு  பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்ட பின்னர் பெண் அரசியல் பிரதிநிதித்துவத்தின் தேவையை  அனுபவரீதியாக உணர்ந்துள்ளோம்.

நாம்  அரசியலில்  ஈடுபட்ட  பின்னர் மக்கள் அபிவிருத்திக்காக குரல் கொடுக்கும் சந்தர்ப்பமும், பெண்களை பாதிக்கும் பிரச்சினைகள் பற்றி உரிய இடங்களில் பேசும் வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது. ஆகவே எதிர்கால தேர்தல்களில் பெண் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். அரசியலில் பெண்கள் இருப்பது பெண்களின் உரிமையை பாதுகாக்கவும் பெண்களை பாதிக்கும் விடயத்தில் தீர்மானம் எடுக்கவும்  பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வன்முறையற்ற சூழலை உறுதிப்படுத்தவும் இது   தேவையாக இருக்கின்றது.

அந்த வகையில் நான்கு  அம்சங்களைக்  கொண்ட  ஒரு  பிரேரணையை  முன்வைத்து  நாம்  செயற்பட விரும்புகின்றோம் நான்கு அம்ச  பிரேரணைகள் பின்வருமாறு -

சட்டம் இயற்றப்படும் பாராளுன்றத்திலும் உள்ளுர் மக்களுக்குத்  தேவையான  முக்கிய தீர்மானங்களை எடுக்கும் இடங்களான உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபையிலும் பெண்களின் பரதிநிதித்துவம்  உறுதிசெய்யப்பட வேண்டும்.  இது  தொடர்பாக  உள்ளுராட்சி மன்றங்கள்,  தேர்தல்  திணைக்களம்,  கட்சித்  தலைமைகள்  மற்றும்  சமூகமட்டத்தில்  இயங்கும் சகல  நிறுவனங்களும் தனிப்பட்டவர்களும்  இணைந்து  செயற்பட  வேண்டும்.

ஜனநாயக  விழுமியங்களை மதிக்கக்  கூடிய,  பல்வேறு  துறைகளில்  முன்னோடிகளாக  திகழும் தகுதிவாய்ந்த  இளம்  பெண்கள்  அரசியலில்  முன்வர  வேண்டும்.  அதேநேரம்,  அரசியல்  கட்சிகள், குடும்ப உறுப்பினர்கள்,  சமூக  மட்ட  அமைப்பினர்  அதற்கான  ஊக்குவிப்பை  வழங்க  வேண்டும்.

சமூகத்தில்  வன்முறைகளால் அதிகம்  பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் மற்றும்  சிறுவர்களாவர் பெண்களுக்குக்கும் சிறுவர்களுக்கும் எதிரான வன்முறைகளை தடுத்து, அவர்களின் பாதுகாப்பை  உறுதிப்படுத்தி,  வன்முறைகளுக்கு  எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பெண்கள்  அரசியலில் பிரவேசிப்பது  மிகவும்   இன்றியமையாததாகும். அத்தோடு பெண்களின் அரசியல்  பிரதிநிதித்துவத்தை சமூகத்தின் தேவையாகவும் பெண்களின் முக்கிய உரிமையாகவும்  கருத வேண்டும்.

தற்போது, அரசியலில்  உள்ள  பெண்களின்  தீர்மானம்  எடுக்கும்  ஆற்றலையும்  பொதுத்தளத்தில் தாக்கமான முறையில் இயங்கும் ஆற்றலையும் ஊக்குவிக்க கட்சிகளும் ஏனைய நிறுவனங்களும் முன்வர வேண்டும். என்ற நான்கு அம்ச  பிரேரணைகளும் முன்வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.




Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.