பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களின் அவசர வேண்டுகோளை அடுத்து மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாரத்திற்குள் கொரோனா தொற்று தடுப்பூசி வழங்க நடவடிக்கை
கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் திட்டமானது நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் படிப்படியாக நடமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்நிலையில் வட மாகாணத்தின் யாழ் மாவட்டத்திற்கு தற்போது இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதேவேளை மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பரவி வருகின்ற கொவிட் 19 பெருந்தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அதற்கான தடுப்பூசிகளை உடனடியாக பெற்றுக் கொடுக்கும் நோக்கில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்கள் சுகாதார அமைச்சு மற்றும் உயரதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி உடனடியாக இத்தடுப்பூசியை வன்னி மாவட்டத்திற்கு வழங்கி வைக்குமாறு அவசர கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆடை தொழிற்சாலையொன்றில் சடுதியாக ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக தற்போது பாரியளவில் இத்தாக்கம் மூன்றாவது அலையாக உருவெடுத்துள்ளது.
இதேபோன்று மன்னார் மாவட்டமானது கடற்றொழில் செய்யும் தொழிலாளர்களை அதிகமாக கொண்டுள்ளதால் மன்னாரில் கொரோனா தொற்று கூடுதலாக பரவுவதற்கான அதிகமான சாதக தன்மைகள் காணப்படுகிற்றன. அத்துடன் இம்மீனவர்கள் இந்திய பெருங்கடலின் எல்லையுடன் சம்பந்தப்பட்ட இடங்களில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றமையாலும் அதனோடு தொடர்புபட்ட ஏனைய காரணங்களாலும் மன்னார் மாவட்டத்திலும் இந்தியாவில் காணப்படும் இத்தொற்று சிலவேளை பரவக்கூடும் என எதிர்வு கூறப்படுகின்றது. இதன்காரணமாக மன்னார் மாவட்டத்திற்கான அவதானம் அதிகமான நிலையில் உள்ளது. அவ்வாறான ஒருநிலை ஏற்படும் பட்சத்தில் அது முழு நாட்டிற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கலாம்.
வட மாகாணத்தின் போக்குவரத்து கேந்திர நிலையமான வவுனியா மாவட்டத்திலும் 3000க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் பாரிய ஆடை தொழிற்சாலை ஒன்றும் அமையப்பெற்றுள்ளது. இதேபோன்ற
ஆடைத் தொழிற்சாலையிலிருந்தே முல்லைத்தீவு மாவட்டத்தில் பெரும்பான்மையான தொற்றாளர்கள் இனங்காணப்பட அடிப்படை காரணமாக அமைந்தது. எனவே வவுனியா மாவட்டமும் அவதானத்துக்குறிய மாவட்டமாக கருதப்படக் கூடியதாகவுள்ளதுடன் ஏனைய மாவட்டங்களுடன் A9 வீதியில் அதிகமான தொடர்புகளை கொள்ள கூடிய போக்குவரத்துக்கு கேந்திர நிலையமாக காணப்படுவதால் இவ்வாறான தொற்று பரவலுக்கான கூடுதலான சாத்தியக்கூறுகள் காணப்படும் தளமாக வவுனியா நகரம் காணப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட கொரோனா தொற்றின் அபாய நிலையை காரணம் காட்டி பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் சுகாதார அமைச்சு மற்றும் உயரதிகாரிகளிடம் விடுத்த அவசர வேண்டுகோளின் பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் வன்னி மாவட்டத்திலுள்ள வவுனியா ,மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கான கொரோனா தொற்று தடுப்பூசிகளை இவ்வாரம், முதல் முதற்கட்டமாக வழங்குவதற்கான ஒப்புதலை அமைச்சு வழங்கியுள்ளதால் இதற்கான துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊடகப்பிரிவு.

