பணிபுரியும் இடங்களில் பெண்கள் எதிர் நோக்கும் பாலியல் அச்சுறுத்தல்.


சில்மியா யூசுப்

ஊடகங்களில் இடம்பெறும் பாலியல் தொந்தரவுகள் தொடர்பில் செய்தி அறை பெண் ஊழியர்களிடமிருந்து வந்த #MeToo  குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து, அவை தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு இலங்கை அரசாங்கம் செவ்வாயன்று உத்தரவிட்டது.

2010 - 2017 காலப் பகுதியில், பெயர் குறிப்பிடப்படாத ஒரு பத்திரிகையில் பணியாற்றியபோது, ஒரு சக ஆண் ஊழியர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்வதாக அச்சுறுத்தியதாக ஊடகவியலாளர் ஒருவர் கடந்த வாரம் ட்வீட் செய்ததைத் தொடர்ந்து, இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் அதிகளவில் வெளிவரத் தொடங்கின.

எந்த பெண்ணும் வேலை செய்ய செல்லும் இடங்களில் தனக்கு விருப்பமான ஒரு ஆடையை அணிவது கிட்டதட்ட சாத்தியமற்ற விடயமாகும். ஏனெனில், சக ஆண் ஊழியர்கள் பொதுவாக பெண்களின் கால்கள் மற்றும் உடல் பற்றி காமவெறியுடனான கருத்துக்களைக் கூறுவர் அல்லது அவர்கள் விரும்பும்போது “செக்ஸியானது” (கவர்ச்சியமானது) என்று கூறுவர்.” என்று அவர் தெரிவித்தார்.

இந்த பாலியல் பலாத்கார அச்சுறுத்தலை பல வருடங்களாக தனது மனதிலிருந்து மறைத்து வந்ததாகச் கூறிய அவர், இந்த நீண்ட நாள் கவலையை சமாளிக்கும் வழிமுறையாக, அதை நினைத்து, கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுமளவு அழுததாகத் தெரிவித்தார்.

பாலியல் குற்றவாளி ஹார்வி வெய்ன்ஸ்டீனின் குற்றங்கள் வெளிவந்தபோது, 2017 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தொடங்கிய #MeToo இயக்கத்தை நினைவூட்டும் வகையிலான பிரச்சாரத்தில் ஏனைய பெண் ஊடகவியலாளர்களும் ட்விட்டரில் ஈடுபட்டனர்.

இவ்வாறு ட்விட்டரில் கருத்துக்கள் தெரிவித்தவர்களில் பெயர் குறிப்பிட விரும்பாத ஊடகவியலாளர்  ஒருவர். தற்போது வெளியிடப்படாத ஒரு பத்திரிகையின் “பிரபலமான பத்திரிகை ஆசிரியர்” ஒருவர் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், அமைதியாக இருக்கும்படி தனது குடும்பத்துக்கு அவர் அழுத்தம் பிரயோகித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

“நான் நீண்ட காலமாக அமைதியாக இருந்தேன். இப்போது எனக்கு என்ன நடந்தது என்பதையும் நான் வெளிப்படுத்த வேண்டும்.” என்று அவர் தெரிவித்தார்.

இலங்கை பத்திரிகையொன்றில் பயிற்சியாளராக பணிபுரிந்த அமெரிக்க ஊடகவியலாளர் ஒருவர் குறித்த பத்திரிகையின் ஒரு சிரேஷ்ட சக ஊழியர் பாலியல் தொந்தரவுக்கு தன்னை உட்படுத்தியதாகவும், பின்னர் அந்த சக ஊழியரை இராஜினாமாச் செய்யுமாறு பிரதம ஆசிரியர் கட்டாயப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

“இலங்கை கண்ட சிறந்த ஊடகவியலாளர் அவர் தான். அவரிடம் கற்றுக்கொள்வதற்கு நான் ஆவலுடன் இருந்தேன்… ஆனால், அடுத்த இரு மாதங்களை அவரால் விரும்பப்படுபவராகவும், பின்னர் அவரால் திட்டு வாங்கப்படுபவராகவும், அவரால் தர்மசங்கடத்துக்கு உட்படுபவராகவும், அவரால் தொடர்ந்தும் தேடப்படுபவராகவும் கடத்தினேன்.” என்று  தெரிவித்தார்.

இவ்வாறு ட்விட்டரில் கருத்து வெளியிட்ட இன்னுமொருவர் “சூறையாடும் ஆண்கள்” குறித்து பேசும் பெண்களை பாராட்டியதுடன், தனது விருப்பத்துக்கு மாறாக ஒரு சிரேஷ்ட சக ஊழியர் தன்னை முத்தமிட எவ்வாறு முயற்சித்தார் என்பதையும் விளக்கினார்.

சண்டே ஒப்சேவர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான தரிஷா பஸ்டியன், இக்குற்றச்சாட்டுக்களை “தொந்தரவானது, வேதனையளிப்பது மற்றும் நன்கு பரிச்சயமானது” என்று குறிப்பிட்டார்.

“இலங்கை செய்தி அறைகளில் நீண்ட காலமாக என்ன நடக்கின்றது என்பது பற்றி பேசும் தைரியத்துக்காக பெண் ஊடகவியலாளர்களுடன் நான் ஒருமைப்பாட்டை தெரிவிக்கின்றேன்.” என்று அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் பேசிய அரசாங்க ஊடகப் பேச்சாளரும், வெகுஜன ஊடக அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல, பெண் ஊடகவியலாளர்கள் ஒரு பாதுகாப்பான சூழலில் பணிபுரிய முடிகிறதா என்று ஆராயுமாறும், அதை உறுதிப்படுத்துமாறும் அரச தகவல் திணைக்களத்திடம் கோரியுள்ளதாகத் தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் பேசிய அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, “எடுக்க முடியுமான கடுமையான நடவடிக்கையை எடுப்போம்,” என்று தெரிவித்ததுடன், “உரிய நடவடிக்கையை எடுக்க நாம் தயங்க மாட்டோம்.” என்று தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு தான் ஏற்கனவே தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

(AFP அறிக்கை) 

தமிழ் மொழி பெயர்ப்பு சில்மியா யூசுப்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.