ஆயிரம் ஆயிரம் ஆசைகள் எண்ணவலைகளில் நீந்திக் கொண்டிருக்கும். நீந்தும் ஆசைகள் எல்லாவற்றிற்கும் ஆசைப்படலாம். ஆனால் நீ நல்லவற்றிற்கு ஆசைகொள். சமூகத்தில் உயர்ந்த இடத்தில் வர வேண்டும் என்று ஆசைப்படு, நல்ல நல்ல சேவைகள் புரிந்திட ஆசைப்படு, உன் இலக்கின் தூரங்களை துரத்திப்பிடித்திட ஆசைப்படு. இப்படி பல பல நல்ல ஆசைகளை உன்னுள்ளே விதைத்திடு. விதைத்த நல்ல ஆசைகளை அடைந்திட அசராமல் அதற்காய் உழைத்திடு.
நீ விரும்புகின்ற நல்லவிதமான ஆசைகளை நீ பெற்றுக்கொள்ளும் தூரம் தொலைவில் இல்லை என்பதை உனக்கு நீயே கூறிக்கொண்டிரு. அவற்றிற்கான உன் உழைப்பினை நிதமும் போட்டுக்கொண்டே இரு. நீ ஆசைப்பட்டவை உன்னை விரைவில் வந்து அணைத்துக்கொள்ளும்.
உன் ஆசைகளை வரையறை செய்திடு. உன் திறமைக்கோ சக்திக்கோ மீறி ஆசைப்பட்டு விடாதே. அது உன்னை அழிவின் விளிம்பிற்கு கூட்டிச் செல்லும். உன் ஆசைக்காய் ஓடிடு. பேராசை கொண்டு உன் சக்திக்கு மேல் ஓடிவிடாதே. இருப்பதும் உன்னை விட்டு விலகிடும். கனாவில் உலாவும் உன் ஆசைகளை நிஜமாய் நீ அனுபவித்திட அசராமல் உழைத்திடு.
அறூபா அஹ்லா