வாழ்வைத் தீர்மானிக்கும் பெறுபேறு இதுவல்ல
( மருதமுனை நிஸா)
சாதாரண தரம்தான் உண்மையிலேயே வெறும் சாதாரண தரம்தான் இது.
வெற்றி பெற்றவர்கள் தோல்வி உற்றவர்கள் என்று எதுவும் இல்லை.
ஏனென்றால் இது சாதாரண தரம்.
வாழ்க்கையில் வெற்றியீட்ட வேண்டிய விடயங்கள் எவ்வளவோ இருக்கிறது .
இந்த சாதாரண தரத்தோடு முடிந்துபோகிற வாழ்க்கை போல் ஏன் நாம் உடைந்த போகவேண்டும்?..
எப்போதுமே எமக்கு கீழ் உள்ளவனைப்பார் அப்போது புரியும் உன் பெறுமதியும் திறமையும்.
சாதாரண தரம் வரை படிக்க முடியாமல் இடைவிலகியவனை விட சாதாரண தரத்தில் சாதாரண சித்தி பெற்றிருக்கிறாய் என்று திருப்தி கொண்டு இறைவனுக்கு நன்றி சொல்.
நான் சித்தியே பெறவில்லை என்று ஏங்குகிறாயா அறவே படியாதவனை விட நீ கெட்டிக்காரன்தான்.
இதுதான் வாழ்க்கையா
இன்னும் எவ்வளவோ இருக்கிறது கற்பதற்கும் வெற்றி தோல்விகளை சந்திப்பதற்கும். உலகக் கல்விக்காக உன் கண்ணீரை வீணாக்காதே. உன் கண்ணீரது தேவைப்படும் இடம் இதுவல்ல.இறைவனிடம் மட்டுமே அது பெறுமதியானது.ஆகவே இந்த சாதாரண தரத்திற்காக உன் கண்ணீரை வீணாக்காதே.
நீ காண வேண்டிய படிப்பினைகள் பல இருக்கிறது .எழுந்திடு...துணிந்திடு..
பரந்த இப்பாரினில் கல்வி என்ன கறிக்கோப்பையளவா?.பரந்து விரிந்த உலகைப்போல் பரப்பி விரித்து விடப்பட்டிருக்கிறது கல்வி.கலங்காதே.கண்களைத் துடைத்து
கடலிலே வீசு உன் கண்ணீரை. எழுந்து மீண்டும் படி முயற்சியை மூச்சாய் கொள்
வயதாகியும் படிக்க துணிந்தவனை விட நீ என்ன மரண வாயில் இருக்கிறாயா?இல்லையே... உனை வெய்வோருக்கும் படிக்காத முட்டாள் என்போருக்கும் பெறுபேற்றை வைத்து உனை எடை போடுவோருக்கும் ஒரு புன்னகையில் பதில் சொல் நீதான் எதிர்காலத்தில் அவர்கள் கண்முன் கம்பீரமாய் காட்சிதருவாய் என்று.
உனை முட்டாள் என்பவர்தான் உண்மையான முட்டாள் என்று நீ புரிந்துகொள். இது என் வெற்றி என்று கர்வ கொடி ஏற்றி பறந்துதிரிபவர்க்கு மனதார வாழ்த்திடு .நீ மனதார வாழ்த்தும் உன் தாராள குணம் எங்கோ உனை உயர கொண்டு சேர்க்கும்.இதனை நீ ஆறுதல் என்று நினைக்காதே உன் நம்பிக்கைக்கு நான் இடும் வித்தென நினைத்து வீரியமாய் வளர்ந்திடு நிச்சயமாக நீயொரு காட்டுத்தேக்காய் உயர்ந்து நிற்பாய் இன்ஷாஅல்லாஹ்.

