எம் முதல் நட்பு
0
October 26, 2019
எம் முதல் நட்பு
🌻உறவு என்பது மிக முக்கியமான ஒன்று. ஒருவருக்கு எந்த உறவு இருக்கிறதோ இல்லையோ நட்பு என்ற உறவு அனைவருக்கும் இருக்கும்.
இது ஒரு வித்தியாசமான உறவு. நம் மீது ஒரு வித அன்பு வைத்துப் பழகி, நம் இன்ப துன்பங்களை பங்கிட்டுக் கொள்ளும். இளமை முதல் முதுமை வரை பல கோணங்களில் இந்த நட்பு வரும். இந்த நட்பின் மூலம் பல உதவிகள் பெற்று முன்னேறியவர்கள் பலர்.
பொதுவாகத் தாய் தந்தை, அண்ணன் தம்பி, அக்கா தங்கை என அனைத்துமே நாம் எதிர்பாராத வித்தியாசமான கோணங்கள் கொண்ட உறவாகும். இதை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால் நட்பு என்ற உறவை நாமே நம் குணங்களுக்கு ஏற்பத் தேர்வு செய்கிறோம். பணத்திற்காக, பாசத்திற்காக, உடன் இருப்பவர் என்பதற்காக, உறவினர் என்பதற்காக, நண்பனுடைய நண்பன் என்பதற்காக இப்படிப் பல முறைகளில் நட்பைத் தேடுகிறோம்.
இவ்வாறு நாம் நட்பு கொள்ளும் நபர் அனுபவமுள்ள ஒருவராக, மற்றவரை விட நம் மீது அதிகம் பாசம் வைத்திருக்கும் ஒருவராக இருந்தால் அது மிகச் சிறந்ததாக இருக்கும்.
ஒருவர் விபரம் தெரிந்த பிறகு தேர்ந்தெடுக்கும் நட்பு வேண்டுமானால் சில நேரங்களில் தவறாகப் போகலாம். ஆனால் நமக்காக நம்முடைய இறைவன் நமக்கே தெரியாமல் சிறு வயதிலிருந்தே ஒரு நட்பை நமக்கு ஏற்படுத்தி உள்ளான். அதவும் நாம் முன்பே கூறியது போல் பல விஷயங்களில் அனுபவமுள்ள, அதிக பாசமுள்ள ஒருவர். அது தான் முதல் நட்பான தொப்புள் கொடி நட்பு.
ஆனால் சிலர் என் தாயை விட என் தோழிக்குத் தான் என்னைப் பற்றிய முழு விபரம் தெரியும். அவள் தான் என்னைப் புரிந்து கொள்பவள், பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்பவள் என்று கூறுகின்றனர். பெற்ற தாயை விட இந்தத் தோழமையை கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக எண்ணுகின்றனர்.
நம்மைப் பெற்றெடுக்க, சிரமத்திற்கு மேல் சிரமத்தைக் கருவறையில் சுமந்தவள் இந்தத் தாய் தான்.
وَوَصَّيْنَا الْاِنْسٰنَ بِوَالِدَيْهِۚ حَمَلَتْهُ اُمُّهٗ وَهْنًا عَلٰى وَهْنٍ وَّفِصٰلُهٗ فِىْ عَامَيْنِ اَنِ اشْكُرْ لِىْ وَلِـوَالِدَيْكَؕ اِلَىَّ الْمَصِيْرُ
மனிதனுக்கு அவனது பெற் றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.
(அல்குர்ஆன் 31:14)
நாம் கருவறையில் இருந்த போது நமக்குக் கிடைத்த முதல் தோழியாகவும், உதிரத்தையே உணவாகத் தந்தவளாகவும் இருப்பவள் தாய் தான்.
300க்கு மேற்பட்ட ஆபத்தான நச்சுக்களை அழிக்கும் ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட தாய்ப்பாலைக் கொடுத்தவள் இந்தத் தாய் தான்.
நாம் பசிக்காக அழுகிறோமா அல்லது விஷப்பூச்சிகளின் தொந்தரவால் அழுகிறோமா என ஒவ்வொரு நிலைகளிலும் அனுபவமுள்ள ஒரு சிறந்த பார்வையோடு நம்மைக் கவனித்து, பாதுகாத்து, நல்ல நேசத்தையும் பிறரை விட அதிக பாசத்தையும் கொடுத்தவள் தாய் தான்.
மொத்தத்தில் நம்மைப் பற்றி நமக்கே தெரியாத பல விஷயங்கள் இந்த முதல் தோழிக்குத் தான் தெரியும். இந்த முதல் தோழி தான் மற்றவர்களை விட நம்முடன் அதிகம் இருப்பவள். நம்மை முதன் முதலில் புரிந்து கொண்டவள். நாம் யாருடன் பழகினால் சிறந்த நட்பு கிடைக்கும் யாருடன் பழகினால் கெட்ட பழக்கங்கள் உள்ள நட்பு கிடைக்கும் என பிரித்துக் காட்டுபவள்.
அனைத்திலும் சிறந்த ஆலோசனை கூறுபவள் இந்த தாய் தான்.
இப்படி அனைத்திலும் நமக்கு ஆரோக்கியமான வாழ்வை ஏற்படுத்திய, பல சிறப்புகள் கொண்ட, தொப்புள் கொடி மூலம் நமக்குக் கிடைத்த இந்த முதல் தோழி தான் முதல் நட்பு.الحمد لله💙
*﴾என் உயிர் தோழியே கண்ணியத்தை கண்மணியாக பேணக் கற்றுக்கொடுத்த அன்புத் தாயே எனது வரிகள் உனக்கே சமர்ப்பணம் ﴿*
رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا ؕ
“என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” 17:24
ﺁﻣــــــــــــــــــﻴﻦ ﻳَﺎ ﺍﻟﻠﻪُ ﻳَﺎ ﺭَﺏَّ ﺍﻟْﻌَﺎﻟَﻤِـــــــــﻴْﻦ
Fathima Binth Zakariya

