ஏப்ரல் 21 க்குப் பின்னரான உழ்ஹிய்யாவை மிக நிதானமாக வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா முஸ்லிம்களிடம் வேண்டுகோள்


   முஸ்லிம்கள் இம்முறை உழ்ஹிய்யாக் கடமையை நிறைவேற்றும்போது நாட்டின் தற்போதைய சூழ் நிலையைக் கருத்திற்கொண்டு, முக்கியமாக  வழமையைவிட மிக அவதானமாகவும் நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என, முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
   இம்முறை உழ்ஹிய்யாக் கடமையை நிறைவேற்றும் முஸ்லிம்களை விழிப்பூட்டும் வகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
   இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது, 
   புனித துல்ஹஜ் மாதத்தை நாம் அடைந்துவிட்டோம். இதில் உழ்ஹிய்யாக் கொடுப்பதற்கு எண்ணி, பலர் அதற்கான ஆயத்தங்களைச் செய்துள்ளனர்.
   ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலையடுத்து, முஸ்லிம்கள் சமய ரீதியிலும், அவர்களின் அன்றாட நடவடிக்கை  விவகாரங்களிலும் பல்வேறு கோணங்களில் பெரும்பான்மை இன மத வெறியர்களினால் மன உளைச்சலுக்கும் சங்கடங்களுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள். இவ்வாறான நிலையிலேயே,  உழ்ஹிய்யாக் கடமையும் நம்மத்தியில் வந்துள்ளது.
   எனவே, முஸ்லிம்கள் உழ்ஹிய்யா வழங்கும் காலகட்டத்தில் அதன் அணுகுமுறைகளைப் பேணி நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
   சரியான சட்ட திட்டத்தின்  பிரகாரம் உழ்ஹிய்யாவுக்கான மிருகத்தை அதன்  சட்ட ஆவணங்களுடன் வழியில் எடுத்து வருவதும், மிருகத்தை  அறுத்த பின்பு அதன் எழும்பு, தோல், இரத்தம் போன்ற கழிவுகளை யாருக்கும் இடைஞ்சல் ஏற்படாத வண்ணம் புதைத்து விடுவதும், அத்துடன்  அவற்றை பிரசாரம் இன்றி  முஸ்லிம்களுக்கு மாத்திரம் பகிருவதும் இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
   குறிப்பாக, போயா தினத்தன்று (14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை) எக்காரணம் கொண்டும் மறைமுகமாகவேணும்,  உழ்ஹிய்யா மிருகத்தை அறுத்துப் பகிரவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.  இதேவேளை, உழ்ஹிய்யாவுக்காக  ஆடுகளையும் கொடுக்க முடியும் என்பதால்  இயன்றளவு இம்முறை  ஆடுகளை வழங்க நடவடிக்கை எடுப்பது மிகவும் சிறந்தது எனக் கருதுகின்றேன்.    பொதுவாக, ஜம் இய்யத்துல் உலமாவிடமும் இதற்கான மேலதிக ஆலோசனைகளைப் பெற்று, உழ்ஹிய்யாவை இன்னும் மிகச்சிறப்பான முறையில் முஸ்லிம்கள் மேற்கொள்ள முடியும் என்றும், முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.