அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிக் கொண்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும், தமது பதவிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஏற்றுக்கொண்டனர்.
உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று (திங்கட்கிழமை) இரவு 7 அமைச்சர்களில் 4 பேர் மீண்டும் தமது அமைச்சுப்பதவியை பெற்றுக்கொண்டனர்.
இராஜாங்க அமைச்சர்களான எச்.எம்.எம்.ஹரிஸ், பைசல் காசிம், அலி சாஹிர் மௌலானா ஆகியோர் அமைச்சுப் பதவிகளை இன்று ஏற்றுக்கொள்ளவில்லை.
ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், அமீர் அலி மற்றும் அப்துல்லா மஹ்ரூப் ஆகியோர் முறையே அமைச்சர், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டனர்.
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பையடுத்து தமது அமைச்சுப் பதவிகளை மீள ஏற்பதற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
அமைச்சராக இருந்த ரிஷாத் பதியுதீன் மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி விலகக் கோரி, அத்துரலியே ரத்தன தேரர் நடத்திய உணவு ஒறுப்புப் போராட்டத்தை அடுத்து, எழுந்த சூழ்நிலைகளால், அரசில் அங்கம் வகித்த முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் 9 பேர் பதவி விலகினர்.
எனினும் கபீர் ஹாசிம் மற்றும் எம்.எச்.ஏ.ஹலிம் ஆகிய இருவரும் பதவிகளை பொறுப்பேற்றுக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
