பேராதனை கறுப்புப் பாலத்துக்கு அருகில் புதிய ரயில் பாலம் அமைப்பு!


பேராதனை கறுப்புப் பாலத்துக்கு (Black Bridge) இணையாக ரயில் போக்குவரத்திற்காக புதிய பாலமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய பாலத்தை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் மற்றும் கட்டமைப்பு வடிவமைப்புகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து விசேட ரயிலில் நேற்று (02) பேராதனை ரயில் நிலையத்தைச் சென்றடைந்த பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக ரம்புக்கனை முதல் பேராதனை வரையிலான மலைநாட்டு ரயில் பாதையில் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் குறித்த பாதைப் பிரிவில் மீண்டும் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பேராதனை கறுப்புப் பாலத்தின் நிர்மாணப் பணிகளும் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமடைந்திருந்த போதிலும், அவற்றை விரைவாக நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரயில்வே திணைக்களத்தின் உட்கட்டமைப்பு மற்றும் ரயில் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதற்கும், ரயில்வே ஊழியர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் சிலர் முன்வைக்கும் விமர்சனங்களால் ரயில்வே ஊழியர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகுவதாகவும், ரயில் பாதை நிர்மாணப் பணிகளை சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்படுவதைப் போன்று மிக விரைவாக முன்னெடுக்க முடியாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.