ஹம்பந்தோட்டை மாவட்டத்திலுள்ள கிரிந்த எனும் கிராமத்தில் முஸ்லிம்களின் மையவாடியை ஆக்கிரமிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.
வியாழக்கிழமை (11) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
கிரிந்த விகாரையின் யடகல சப்த மங்கள தேரர், பன்சலைக்கு அருகாமையில் இருக்கும் மையவாடி காணியின் 30 பேர்சர்களை ஆக்கிரமித்துள்ளார். கடந்த வாரம் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் உச்சகட்டமாக டோசர்கள் கொண்டுவந்து அங்கு தரைமட்டமாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, மலே சமூகத்தை சேர்ந்த முஸ்லிம் மக்கள் அதனை வன்மையாக கண்டித்தனர். அவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு மையவாடி காணிக்குள் அத்துமீறிய சம்பவங்கள் இடம்பெற்றமை தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் காண முடிந்தது.
இலங்கைக்கு பல வகையிலும் சேவையாற்றியவர்கள் மலே சமூகத்தவர்கள். இலங்கை பொலிஸ் சேவையில் நாட்டுக்காக உயிர் நீத்த முதல் நபரும் இந்த மலே சமூகத்தை சேர்ந்த சபான் எனும் முஸ்லிமாவார். அவர் உயிர் நீத்த தினத்தில்தான் தேசிய பொலிஸ் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
நாட்டுக்கான அர்ப்பனித்த மலே சமூகத்தின் அடக்கஸ்தளத்தை ஆக்கிரமிப்பு செய்யப்படுவது அந்த சமூகத்தை இழிவுபடுத்துவதாக அமையும்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஆமித் அவர்களால் இந்த மையவாடிக்கான காணி உறுதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. பலதசாப்தமாக மையவாடிக்காக பயன்படுத்தப்படும் இக்கானி ஆக்கிரமிப்பு செய்யப்படுவது அடாத்தான செயலாகும். இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

