கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 20 விநாடிகளில் வெளியேற முடியுமான ஒன்லைன் முறைமை அறிமுகம்


 ( மினுவாங்கொடை  நிருபர் )

கட்டுநாயக்க,பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் பயணிகளை, 20 வினாடிகளுக்குள் விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கும் புதிய ஒன்லைன் முறைமை, நேற்று (26) அறிமுகப்படுத்தப்பட்டது.

   சிவில் விமான போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்கவினால், இந்த ஒன்லைன் முறைமை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 இந்த முறைமையை அறிமுகப்படுத்தியதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், 

 இந்தப் புதிய ஒன்லைன் முறைமை அறிமுகப்படுத்தப்படுவதனால், நேரம் 20 விநாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.

 இலங்கைக்கு விஜயம் செய்யும் பயணிகள், விமான வருகையின் போது அல்லது கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைந்த பின்னர், 

www.airport.lk 

ஊடாக 

https://www.airport.lk/health_declaration/index என்ற இணைப்பின் ஊடாக, தமது விபரங்களை வழங்க முடியும்.

வருகைக்கான ஓய்வறையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள QR குறியீட்டை அணுகுவதன் மூலம், பயணிகள் தமது விபரங்களைப் பதிவேற்றலாம்.

அவர்களின் தடுப்பூசி அட்டை மற்றும் இலங்கைக்கு வருவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் பெறுபேறுகளை, இந்த அமைப்பின் கீழ் ஒன்லைனில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

 இது, பயணிகள் வரிசையில் காத்திருப்பது மற்றும், ஏராளமான ஆவணங்களைச் சரி பார்ப்பது அல்லது பிற சாதனங்களைப் பயன்படுத்தி, தகவல்களை அனுப்புவது போன்றவற்றிலிருந்து அவர்களை விடுவிக்கிறது.

இந்தப் புதிய முறைமையின் ஊடாக, பயணிகள் 20 வினாடிகளில் விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர்.இதன் காரணமாக, கொவிட் தொற்றினால் பாதிக்கப்படும் அபாயத்தை இது  குறைக்கிறது.

   இந்த முறைமையின் மூலம், விமான நிலையத்தின் வெளியேறும் வாயிலில் கடமையாற்றும் பாதுகாவலர்களிடம் விபரங்களை முன் வைப்பதால், விமான நிலையத்தை விட்டும் பயணிகள் விரைவாக வெளியேற முடியும் என்று தெரிவித்தார்

   இதேவேளை, 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் கட்டுநாயக்க விமான நிலையம் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும், இராஜாங்க அமைச்சர் மேலும் இங்கு சுட்டிக்காட்டினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.