ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ பாராளுமன்றம் செல்வதற்கு வழி செய்யும் வகையில் தமது ஆசனத்தை விட்டுக்கொடுக்க கட்சியின் எந்த ஒரு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும் ஆயத்தமாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.
பெசில் ராஜபக்ஷ அடுத்த வாரமளவில் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தற்போது பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. எவ்வாறாயினும் பெசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள வேண்டுமாயின் தற்போது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இராஜினாமாச் செய்ய வேண்டும் என்பதோடு, அது தொடர்பிலும் தற்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.
அவ்வாறு இராஜினாமாச் செய்பவருக்கு அரசாங்கத்தின் வேறு பதவிகளை வழங்குவதற்காகவும் தற்போது பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பெசில் ராஜபக்ஷவுக்கு வழங்கப்படவுள்ள பாராளுமன்ற ஆசனம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கண்டியில் வைத்து பேராசிரியர் ரஞ்சித் பண்டாரரவிடம் கேட்டனர்.
“அவருக்காக பாராளுமன்ற ஆசனத்தை விட்டுக்கொடுப்பதற்கு பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் ஊடாகப் பாராளுமன்றம் சென்ற நாம் அனைவரும் ஆயத்தமாக உள்ளோம். நான் பாராளுமன்றத்திலிருந்து விலகுவதைப் பற்றி பேசும் நேரமல்ல இது. அவ்வாறான ஆயத்தங்களும் இல்லை. அவ்வாறிருந்தால் இப்பிரதேசத்தில் இந்நடவடிக்கைகளுக்கு நான் வந்திருக்கவும் மாட்டேன்” என்றார். (சிங்கள அததெரண)