கலே பண்டார என்னும் வத்ஹிமி இலங்கையின் வட மேல் பிரதேசம் ( வட மேல் மாகாணம் ) நான்கு ராஜதானிகளை உள்ளடக்கிய பெருமை பெற்றது .
பண்டுவஸ் நுவர ( கி.பி. 12 ஆம் நூற்றாண்டு ) தம்பதெனிய ( கி.பி. 13 ஆம் நூற்றாண்டு )யாப்பஹுவ ( கி.பி. 13 ஆம் நூற்றாண்டு )குருணாகல் ( கி.பி. 13 – 14 ஆம் நூற்றாண்டு ) குருணாகல் ராஜதானியின் காலம் அரை நூற்றாண்டு மாத்திரமே . இக்குறுகிய காலத்துக்குள்ளேயே துயர் படிந்த பல சம்பவங்களைக்கொண்ட வரலாறு இதற்குண்டு. .
குருணாகலுக்குப் பல பெயர்கள் உள்ளன . அதன் மிகத் தொன்மையான பெயர் ஹஸ்திசைலபுர ( Hasthisailapura ) . [ ஹஸ்தி ( அத்தி ) – யானை ; சைல(ம்) – மலை ; புர(ம்) – நகரம் ]யானையொன்று படுத்திருப்பது போன்ற தோற்றத்தில் , நகரின் மத்தியில் ஒரு குன்று காணப்படுவதால் இப்பெயர் பெற்றது. இந்தப் பெயர் இன்றும் அரச மட்டத்தில் ( விசேட சந்தர்ப்பங்களில் ) உத்தியோகபூர்வமாகப் பயன்படுத்தப்படுகின்றது.
இதைத்தவிர , அத்துகல் புர (Athugalpura ) என்ற பெயரும் உண்டு. [ அத்து ( எத்தா ) – யானை ; கல் (Gal ) – கல் /கற்பாறை]தற்காலத்தில் குருணாகல்
( சிங்களத்தில் குருணேகல – Kurunegala ) என்ற பெயரே வழக்கிலுள்ளது .
குருணேகல ( Kurunegala ) என்ற பெயரிலுள்ள , ‘ குருணே ’ என்பது தந்தமுடைய யானையையும் ‘ கல ’ என்பது கல் அல்லது கற்பாறையையும் குறிக்கின்றது.
ஆக , எல்லாப் பெயர்களுமே ‘ எத் கந்த ’ ( Eth Kandha ) அல்லது எதகல ( Ethagala ) என்றழைக்கப்படும் இந்த யானைக் குன்றை அடிப்படையாகக்கொண்டே வந்துள்ளன.
யாப்பஹுவ , தம்பதெனிய ஆகிய ராஜதானிகளில் ஆண்ட முதலாம் புவனேகபாகு மன்னனின் மகனான இரண்டாம் புவனேகபாகு , குருணாகல்லை ராஜதானியாக்கி கி.பி. 1293 தொடக்கம் 1302 வரை ஆட்சி புரிந்தான் ( மன்னர்களின் ஆட்சிக் காலங்கள்பற்றி முரண்பட்ட தகவல்கள் உள்ளன ) . இவனுக்கு ஆண் வாரிசு இல்லாமலிருந்தது. இதனால் வருந்திய அரசன் சோதிடர்களைக் கலந்து ஆலோசனை செய்தான் . மாற்று மத நம்பிக்கைகொண்ட ஒரு பெண்ணை மணந்துகொண்டால் அவள் மூலம் ஆண் குழந்தை கிடைக்கும் அதிர்ஷ்டமுண்டு என அச்சோதிடர்கள் அவனிடம் கூறினர். எனவே , அஸ்வதும ( Aswadduma ) என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். “ இப்பெண்ணும் அவளது குடும்பத்தினரும் மேல் மாகாணத்தின் பேருவளையிலிருந்து குருணாகல் வந்து , தெலியாகொன்னைக்கு அண்மையிலுள்ள அஸ்வதும என்னும் கிராமத்தில் வசித்துள்ளனர் . அவளது முன்னோர் , ஈரான் நாட்டின் குராஸான் பகுதியிலிருந்து வந்தவர்கள் ” தகவல் : பேராசிரியர் எம்.எஸ்.எம் . அனஸ் . இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை கிடைத்தது . இக்குழந்தைக்கு , அதன் தாய்வழிப் பாட்டனார் முஹம்மது இஸ்மாயில் எனப் பெயர் சூட்டினார். பிற்காலத்தில் , புவனேகபாகு மன்னனின் விருப்பப்படி வத்ஹிமி பண்டார என்ற பெயரால் இஸ்மாயில் அழைக்கப்பட்டான். பாதுகாப்பின்பொருட்டு , சிறுவயதிலேயே இஸ்மாயில் பேருவளைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தாய்வழிக் குடும்பத்தினருடன் வசித்தான் . வாலிபப் பருவம்வரை அங்கேயே வாழ்ந்து கல்வியும் கற்றான் . இஸ்லாம் மதக் கல்வியிலும் அவன் தேர்ச்சிபெற்றிருந்ததாகக் கூறப்படுகின்றது. வத்ஹிமி இளைஞனாக இருந்தபோது , அவனது தந்தை வேறொரு மன்னனுடன் யுத்தம் செய்யும்பொருட்டு தனது படையுடன் குருணாகல் ராஜதானியிலிருந்து வெளியேறினான் . இக்காலப் பகுதியில் அவனது பட்டத்து ராணியும் கருவுற்று ஆண் குழந்தையொன்றைப் பெற்றிருந்தாள் . மன்னன் போரில் வெற்றி பெற்றால் வெள்ளைக் கொடியையும் தோல்வியுற்றால் கறுப்புக் கொடியையும் காட்டும்படி அவனுடைய மனைவிமார் வேண்டிக்கொண்டனர். போரில் புவனேகபாகு வெற்றி பெற்றான். இச்செய்தியை அரண்மனைக்கு அறிவிக்கும்படி தூதுவன் ஒருவனை அவன் அனுப்பிவைத்தான். அத்தூதுவன் வெற்றிக்களிப்பில் அதிகளவு மதுவருந்தியிருந்ததால் , வெள்ளைக் கொடிக்குப் பதிலாக கறுப்புக் கொடியை ஏந்தியவாறு நாட்டுக்குள் வந்து சேர்ந்தான். இதனைக் கண்டு , மன்னன் போரில் தோற்றதாக எண்ணிய அவனது மனைவிமார் 20 பேரும் ‘ பெலும்கல ’ ( Belumgala ) என்ற மலையிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டனர் ( தற்கொலை செய்துகொண்ட மனைவிமாரின் எண்ணிக்கை 50 க்கும் அதிகமானது என்றும் கூறப்படுகின்றது ) . இந்த விபரீதத்தைக் கண்ட தூதுவனும் அதிர்ச்சியால் இறந்தான். பட்டத்து ராணியின் கைக்குழந்தையைப் பணிப்பெண்ணொருத்தி பாதுகாப்பாக எடுத்துச் சென்றாள். நாடு திரும்பிய மன்னன் , நடந்ததையறிந்து தானும் தற்கொலை செய்துகொண்டான். குருணாகல் ராஜதானி மன்னனற்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. இவ்வேளை , வத்ஹிமி பண்டாரவை அங்கு அழைத்து வந்த உறவினர்கள் பட்டத்துக்குரியவன் அவனே என்றும் ஆட்சியை அவனிடம் ஒப்படைக்கவேண்டுமென்றும் வாதிட்டனர். முஸ்லிம் ஒருவனை மன்னனாக ஏற்றுக்கொள்ள சிங்கள மக்களில் ஒரு பகுதியினரும் பௌத்த மத குருமாரும் விரும்பவில்லை . எனினும் , வேறு வழியில்லாமையால் சம்மதித்தனர். இளைஞனான வத்ஹிமி பண்டார மன்னன் குறுகிய காலத்திலேயே சிங்கள மக்களின் அதிருப்தியைப் பெற நேர்ந்தது . அவன் சிங்கள மக்களைவிட முஸ்லிம்களுக்கு அதிக சலுகைகள் வழங்கிப் பாரபட்சமாக நடப்பதாகவும் சிங்கள மக்களை அழிப்பதற்கான மறைமுகத் திட்டத்துடன் இயங்குவதாகவும் விரோதிகளால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன . அவனை எப்படியும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற முடிவுடன் சதித் திட்டங்கள் வகுக்கப்பட்டன.
குறித்த ஒரு தினத்தில் யானைப் பாறைமீது ‘ பிரித் ’ வைபவமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வுக்கு மன்னனும் அழைக்கப்பட்டான். மன்னன் அமர்வதற்காக பாறையின் உச்சியில் விசேட மேடையொன்று அமைக்கப்பட்டது. மன்னனும் வந்து மேடையில் அமர்ந்தான். பிரித் நிகழ்ச்சியில் மக்கள் லயித்திருந்தபோது , மன்னன் அமர்ந்திருந்த மேடையின் கால்களைக் கட்டியிருந்த கயிறுகள் திட்டமிட்டபடி அறுத்துவிடப்பட்டன. மேடை சரிந்தது ; பெரும் அவலக் குரலோடு மன்னன் கீழே வீழ்ந்து இறந்தான். அவன் எவ்வளவு காலம் ஆட்சி செய்தான் என்பதுபற்றிய பதிவுகள் கிடைக்கவில்லை . ஆயினும் , மூன்று வருடங்களுக்கு உட்பட்ட குறுங்காலமே அவனுடைய ஆட்சி நிலவியது என்ற தகவலுண்டு.
வத்ஹிமி மன்னனின் உடல் , அவனுடைய தாய்வழி உறவினர்களின் விருப்பத்துக்கேற்ப இஸ்லாமிய முறைப்படி அம்மலையடிவாரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த அடக்கத்தலம் இன்றும் முஸ்லிம்களின் பராமரிப்பில் உள்ளது.
மரணித்த வத்ஹிமி மன்னன் ஆவியாக நடமாடுவதாகவும் சில இரவுகளில் அவன் போர்க்கோலம் பூண்டு குதிரையிலேறி ஊரை வலம் வருவதைத் தாம் கண்டதாகவும் செவிவழிக் கதைகள் பரவத் தொடங்கியதும் , மன்னன் தம்மைக் காக்கவே இவ்வாறு நகர்வலம் வருவதாக சிங்கள மக்கள் நம்பத் தொடங்கினர். இதனால் சிங்கள மக்கள் கலே பண்டாரவை காவல் தெய்வமாக வழிபடத் தொடங்கினர். கலே பண்டார அவுலியா என்று கூறும் முஸ்லிம்கள் இன்றுமுள்ளனர் . எனினும் , அங்கு வழிபடச் செல்வோரில் பெரும்பாலோர் சிங்கள மக்களே . அவர்களுக்குரிய புரோகிதர் பணிகளை முஸ்லிம்களில் ஒரு சிலரே செய்துவருகின்றனர் .
இதனைத் தவிர , வத்ஹிமி மன்னன் வீழ்ந்து இறந்த இடத்தில் சிங்கள மக்கள் தனியான வழிபாட்டுத் தலமொன்றை அமைத்து அங்கும் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதோடு ஆண்டுதோறும் உற்சவமொன்றையும் நடத்துகின்றனர்.
குருணாகல் , தெலியாகொன்னையிலுள்ள “ ஒற்றை மீஸான் கபுரடி ” என்று அழைக்கப்படும் கல்லறை , வத்ஹிமி மன்னனின் தாயினுடையது என்று கூறப்படுகின்றது.