முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண்தலைமைத்துவத்தினை கொண்ட சிறுகைத்தொழில் தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்
முல்லைத்தீவு மாவட்ட உள்ளுராட்சி சபைகளின் பெண் பிரதிநிதிகள் ஊடக சந்திப்பு 27ம் திகதி சனிக்கிழமை மாங்குளத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுயதொழிலை முன்னெடுத்துவரும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் வாழ்வாதார ரீதியில் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.
இது குறித்து 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதி உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு கடித்த்தினை அனுப்பிவைத்துள்ளார்கள்.
இதன் போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில் முல்லைத்தீவு மாவட்டமானது யுத்தத்தின் காரணமாக சுமார் 5000 ற்கும் அதிகமான பெண் தலைமைத்துவ குடும்பங்களை கொண்ட பிரதேசமாக காணப்படுகின்றது. பெரும்பாலும் சிறு கைத்தொழிலை தமது வாழ்வாதாரமாக கொண்ட குடும்பங்கள் பல உள்ளன. தற்போது நாடளாவிய ரீதியில் கொரோணா தொற்றினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சுயதொழிலை முன்னெடுக்கும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் வாழ்வாதார ரீதியில் பல இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகிறார்கள்.
இவ்வாறான சூழ்நிலையில் இவர்கள் தொடர்பில் குரல் கொடுக்க வேண்டியது பெண் அரசியல் பிரதிநிதிகள் என்ற வகையில் எம் பொறுப்பும் கடமையுமாகும்.
கோரிக்கைகளாக நாடளாவிய ரீதியில் கொரோணா தொற்றினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் பெண்தலைமைத்துவ குடும்பங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே அவர்களுக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்த அதற்கான மாற்றுவழிகளை முன்னெடுக்க கைத்தொழில் அதிகார சபை மற்றும் பொறுப்பு வாய்ந்த அமைப்புக்கள் முன்வரவேண்டும்.
தற்போதுள்ள சூழ்நிலையில் மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கிவருகின்றார்கள் அவர்களுக்கான மூலப்பொருளை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதுடன் அதனை மானிய அடிப்படையில் வழங்க அரசு முன்வரவேண்டும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தின் மத்தியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உற்பத்திகளை மேற்கொள்வதற்கான பயிற்சிநெறிகளை வழங்குவதுடன் பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்க உரிய திணைக்களங்கள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
தரமான மற்றும் நவீனத்துவம் மிக்க உற்பத்திகளை மேற்கொள்வதற்கான தொழில்நுட்ப உதவி மற்றும் உபகரணங்களை வழங்குதல்.
கொரோணா தொற்றினால் வாழ்வாதார ரீதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதார திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்.
இக்கோரிக்கைகளை ஐனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண ஆளுனர், முல்லைத்தீவு மாவட்ட அரசஅதிபர் மற்றும் பொறுப்புவாய்ந்த திணைக்களங்கள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தி நிற்கின்றோம் என தெரிவித்தார்கள்.