அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இயங்கி வரும் 'சிறந்த இலங்கையை உருவாக்குவதற்கான மக்கள் ஒன்றியத்தின்' ஏற்பாட்டில் 2020ஆம் ஆண்டு தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (28) அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சிறந்த இலங்கை உருவாக்குவதற்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவரும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகின் உதவிப் பணிப்பாளருமான எம்.ஏ.சி.முகம்மட் றியாஸ் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீஸன் பிரதம அதிதியாகவும், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.முஹம்மட் ஹாசிம்
விஷேட அதிதியாகவும் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி கௌரவித்தனர்.
அம்பாறை மாவட்டத்தில் பல்வேறுபட்ட செயற்திட்டங்களை முன்னெடுத்துவரும் இவ்வொன்றியம் மாணவர்களின் கல்வி மேம்பாடுக்கள் கருதி அவர்களை ஊக்கப்படுத்திவருவதுடன் இளைஞர், யுவதிகளுக்கான பல்வேறு வழிகாட்டல் செயற்றிட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது.
அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு தரம்-5 புலமை பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்று சித்தியெய்திய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வின் ஓர் அங்கமாக அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சித்தியடைந்த 69 மாணவர்கள் இதன் போது கௌரவிக்கப்பட்டார்கள்.