மூதூர் காணி விடயத்தில் அரசு நீதியற்ற செயற்பாடுகளை நிறுத்த வேண்டும்- இம்ரான் மகரூப்

மூதூர் காணி விடயத்தில் அரசு நீதியற்ற செயற்பாடுகளை நிறுத்த வேண்டும்-இம்ரான் மகரூப் 


மூதுர் காணி விடயத்தில் அரசு நீதியற்ற செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,மூதூர் 64 ஆம் மைல் கல் பகுதியில் உள்ள தனியார் காணியை உரிமையாளர்களுக்கு  தெரியாது அரசு நில அளவை செய்ய முற்பட்டதால் பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.


இந்தக் காணி பொதுமக்களுக்குச் சொந்தமானது. நீண்ட காலமாக அவர்களால் பராமரிக்கப்பட்டு விவசாயச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்படியிருக்கையில் இவர்களுக்குத் தெரியாமல் எப்படி இந்தக் காணியை அரசு நில அளவை செய்ய முடியும். இவ்வாறு செய்ய முற்படுவது அடாவடித்தனமான செயற்பாடாகவே அமையும். 

சகல மக்களையும் அவர்களது உடமைகளையும் பாதுகாக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு அரசுக்கு உள்ளது. நிலைமை இப்படியிருக்கும் போது இந்த விடயத்தில் தனது தார்மீகப் பொறுப்பை அரசு மீறியுள்ளது. 

மூதூர்ப் பிரதேச மக்கள் கடந்த கால பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக பல்வேறு இழப்புகளை சந்தித்தவர்கள். சொல்லொணாத் துயரங்களுக்கு முகங்கொடுத்தவர்கள். பல்வேறு பாதிப்புகளை அனுபவித்தவர்கள். 

இந்த மக்கள் மீது அரசு இவ்வாறான முறையற்ற நடவடிக்கையை முன்னெடுத்திருப்பது மீண்டும் அவர்களை இன்னலுக்கு உட்படுத்தும் செயலாகும். இது குறித்து நான் மிகவும் கவலையடைகின்றேன்.

எனவே அரசு இந்த நீதியற்ற செயற்பாடுகளை நிறுத்த வேண்டும். எல்லாவற்றையும் நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களை அனுசரித்து முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.