மறு அறிவித்தல் வரை அரச நிறுவனங்களில் பொதுமக்கள் சேவை தினம் இடைநிறுத்தம்
( மினுவாங்கொடை நிருபர் )
சகல அரசாங்க நிறுவனங்களிலும் பொதுமக்கள் சேவை தினம், மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அத்தியவசியத் தேவைகளுக்காக மாத்திரம் அரச மற்றும் தனியார் அலுவலகங்களுக்குச் செல்லுமாறு, சுகாதார அமைச்சினால் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
கொரோனாத் தொற்றைக் கருத்திற் கொண்டு, பொதுமக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வேண்டுமென, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் பெரும்பாலானோர், அவர்களுக்குத் தெரியாமலேயே வைரஸ் தொற்றுடன் இருப்பதாகவும், இதன்காரணமாக இயலுமானவரை ஒன்றுகூடல்களைத் தவிர்க்குமாறும், சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஏதேனுமொரு இடத்திற்குச் செல்லும் போது இயலுமானவரை சமூக இடைவௌிகளைப் பேணுமாறும், எந்நேரமும் முகக்கவசங்களை அணியுமாறும் அவர் பொதுமக்களை வலியுறுத்திக் கேட்டுள்ளார்.
இதனிடையே, அரச நிறுவனங்களில் அத்தியவசியத் தேவைகளுக்காக மாத்திரம் சேவைகளை மட்டுப்படுத்தி, அதிகளவான பொதுமக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறு, அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

