இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலியா அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன்படி இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. 20 ஓவர் தொடரில் சொதப்பிய ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவன் சுமித் ஒரு நாள் தொடரில் சாதிக்கும் முனைப்புடன் உள்ளார். அதே சமயம் இந்த சீசனில் உள்ளூரில் நடக்கும் கடைசி தொடரை வெற்றியுடன் நிறைவு செய்யும் வேட்கையுடன் இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து ஆயத்தமாக உள்ளது.


ஜோஸ் பட்லர், ஜோப்ரா ஆர்ச்சர், மார்க்வுட் ஆகிய இங்கிலாந்து வீரர்கள் கடந்த ஆண்டு உலக கோப்பையை வென்ற பிறகு முதல்முறையாக ஒரு நாள் போட்டி அணியில் இன்று களம் காண உள்ளனர். காயத்தில் இருந்து குணமடைந்து விட்ட அதிரடி வீரர் ஜாசன் ராயின் வருகை இங்கிலாந்தின் பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும். மொத்தத்தில் பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி சுற்றான சூப்பர் லீக்கில் இந்த தொடரும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அணியின் வெற்றிக்கு 10 புள்ளியும், டை அல்லது முடிவு கிடைக்காமல் போனால் 5 புள்ளியும் வழங்கப்படும். அந்த வகையிலும் இந்த தொடர் முக்கியத்துவம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

News : Azhar Sadath
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.