இனவாத அரசியலை ஒழிக்க வேண்டும்: -கலாநிதி.ஜனகன்...!

இனவாத அரசியலை ஒழிக்க வேண்டும்:
-கலாநிதி.ஜனகன்...!

“சிறுபான்மை அரசியல் தலைவர்கள், தங்களின் கருத்துகளைக் கூற முற்படும் போது அவர்களுக்கு எதிராக கூச்சலிட்டுத் திணிக்கப்படும் இனவாத அரசியலை இல்லாதொழிக்க வேண்டும்” என, ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் கொழும்பு மாவட்ட தமிழர் வேட்பாளருமான கலாநிதி வி. ஜனகன், வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

“இன்று கொவிட் 19 இற்கு எதிராக இலங்கை மக்கள் அனைவரும் இணைந்து அரசாங்கத்தின் ஒழுங்குபடுத்தல்களுக்குச் செவிமடுத்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு சில அரசியல்வாதிகளும் ஒரு சில ஊடகங்களும் சிறுபான்மையினரைத் தொடர்ச்சியாகத் தூண்டிவருகிறார்கள். 

“இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கையராக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கண்ணுக்கு தெரியாத இந்த வைரஸை ஒழிக்கப் போராட வேண்டும். ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில் சிறுபான்மை அரசியல் தலைவர்கள், தங்களின் கருத்துகளைக் கூற முற்படும் போது அவர்களுக்கு எதிராக கூச்சலிடுவது, இந்த வைரஸ் பரவலுக்கான காரணம் முஸ்லிம்கள் என்ற கருத்தை மக்கள் மத்தியில் விதைக்க முற்படுவது என பல்வேறுபட்ட இனவாத அரசியலை ஒரு சில கூட்டம் செயற்படுத்துகின்றது. 

“இந்த வேளையிலும் இனவாத கருத்துகளை மக்களிடம் பரப்பி அதனை ஆயுதமாக்கி இந்தத் தேர்தல் போராட்டத்தில் வெற்றி பெறலாம் என இந்த அழுகிப்போன அரசியல் கலாசாரத்தை முன்னெடுக்க முயல்கிறார்கள். ஆனால் இந்த கொவிட் 19 க்கு யார் சிங்களவர், யார் தமிழர், யார் முஸ்லிம் எனத் தெரிவதில்லை என்பதனை அறியாத கூட்டம் இது. இவர்களுடைய தேர்தல் நோக்கத்துக்காக இனங்களிடையே பகைமையை வளர்ப்பதற்கு முயன்று வருகிறார்கள். 

“நாம் எல்லோரும் எவ்வாறு ஒன்று சேர்ந்து இந்த உயிர்கொல்லி கொவிட் 19 ஐ அழிப்பதற்கு முயல்கிறோமோ, அவ்வாறு இந்த இனவாத அரசியல்வாதிகளையும் அந்த எண்ணங்களையும் இந்த நாட்டில் இருந்து அகற்ற வேண்டும். இதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என கலாநிதி ஜனகன் தெரிவித்துள்ளார்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.