சினிமா என்ற பாவத்திலிருந்து விலகுகிறேன். பிரபல ஹிந்தி நடிகை அறிவிப்பு.


ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இன்று சூடாக விவாதிக்கப்பட்டு வருவது “தங்கல்” “சீக்ரட் சூப்பர் ஸ்டார்” போன்ற ஹிந்தி திரைப்படங்களில் நடித்தவரும் நடிப்புக்காக தேசிய விருது பெற்றவருமான கஷ்மீரை சேர்ந்த ஜைரா வாசிம் என்பவரின் அறிவிப்புதான்.

ஆம். நான் திரைப்படத்துறையை விட்டு விலகுகிறேன் என்ற அவருடைய அறிவிப்பை விட அதற்கு அவர் சொன்ன காரணம்தான் இந்த விவாதங்களுக்குக் காரணம்.

“ஐந்து வருடங்களுக்கு முன் நான் எடுத்த முடிவால் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். அதனால் எனது வாழ்வில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. இப்போதும் திரைத்துறையை விட்டு விலகும் இந்த முடிவும் இன் ஷா அல்லாஹ் எனது வாழ்வில் மிகச் சிறந்த திருப்பமாக அமையும்.”

“திரைப்படத்துறைக்கு நான் பொருத்தமானவளாக இருந்தாலும் நான் இந்த இடத்தை சேர்ந்தவள் அல்ல என்பதை உணர்கிறேன்.”

“எனது இறை நம்பிக்கைக்கு (ஈமான்) ஊறு விளைவிப்பதாகவும் இறைவனுக்கும் எனக்குமான தொடர்பை சேதப்படுத்துவதுமாக நான் தேர்ந்தெடுத்த இந்தத் திரைப்படத்துறை இருப்பதால் இந்தத் துறையை விட்டு முற்றிலும் விலக முடிவு செய்துள்ளேன்.”

“இந்தத் துறையால் நான் பேரும் புகழும் பெற்றாலும் இறைவனின் பரக்கத் என்னும் வளத்தை இழந்து விட்டதாக உணர்கிறேன்.”

“இதனால் நான் என்னை புனிதப்படுத்திக் கொள்வதாக யாரும் நினைக்க வேண்டாம். புதிதாக மீண்டும் என் வாழ்க்கையை இறைநம்பிக்கையுடையவளாக குர் ஆன் காட்டிய வழியில் ஆரம்பிக்க விரும்புகிறேன்.”

அவர் கடைசியாக நடித்த “ஸ்கை இஸ் பிங்க்” திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் அவரது இந்த முடிவு திரையுலகில் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. 

இந்த முடிவுக்கு அவர் தனது மதத்தை காரணமாகக் குறிப்பிட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் ஆதரவையும் கடுமையான விமர்சனங்களையும் பெற்றுத் தந்துள்ளது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.