உடல் பருமனாக இருப்பவர்களைப் பார்த்தால், 'நல்லா சாப்பிடுவாங்க, உடற்பயிற்சி செய்யவே மாட்டாங்க' என்று தான் நினைக்கத் தோன்றும். இது தவறான கண்ணோட்டம்.
அதிகமாக சாப்பிடும் சிலர், சுறுசுறுப்பாக வேலை செய்ய மாட்டார்கள்; ஆனால், ஒல்லியாக இருப்பர். சிலர், உணவு கட்டுப்பாட்டுடன் இருப்பர்; அதிக நேரம் வேலை செய்வர்; உணவு கட்டுப்பாட்டை சிறிது தளர்த்தி னாலும், எடை அதிகரித்து விடும்.
சர்க்கரைக் கோளாறு போன்றது தான், உடல் பருமனும். சர்க்கரை அதிகம் சாப்பிடுவதாலேயே, சர்க்கரைக் கோளாறு வருவதில்லை; சர்க்கரை சாப்பிடாவிட்டாலும், சர்க்கரைக் கோளாறை உண்டாக்கும் காரணிகள் உடம்பில் இருந்தால், சர்க்கரைக் கோளாறு வரவே செய்யும். காரணம், உடல் உள் செயல்பாடு சார்ந்த, ஒரு கோளாறு.
அதே போன்றது தான் உடல் பருமனும். உணவு செரிமானம் ஆவதற்கான, உடல் உள் செயல்பாடு சரியாக இல்லாததால், பருமன் ஏற்படுகிறது.
ஒரே வீட்டில், உடன் பிறந்த இருவர், ஒரே உணவு, ஒரே அளவில் சாப்பிட்டாலும், ஒருவர் குண்டாக இருக்கலாம்; ஒருவர் ஒல்லியாக இருக்கலாம். 'டயட்' மற்றும் ஜாகிங் இரண்டையும் தவறாமல் செய்யும்போது, உடல் எடை குறையும் என்றால், இதை செய்யாத பலரும் ஒல்லியாகத் தானே இருக்கின்றனர்.
சர்க்கரைக் கோளாறு இருக்கும்போது, இனிப்பு சாப்பிட்டால், சர்க்கரை அதிகரித்து விடும்; அதைப் போலவே, உணவு எரிப்புத் தன்மை சார்ந்த உள் செயல்பாடு கோளாறு இருந்தால், உணவில் கட்டுப்பாடு இல்லாவிட்டால், உடல் எடை அதிகரித்து விடும்.
உடல் எடை, 70 கிலோ இருக்கும் ஒருவரின் உடல் உள்செயல்பாடு சரியாக இருந்தால், அதிக கலோரி உள்ள உணவை தினமும் சாப்பிட்டாலும் அவரால், 100 கிலோவை தொடமுடியாது. 100 கிலோவிற்கு மேல் எடை கூடுகிறது என்றால், அவரின் உடல் எரிப்பு சக்தியில் கோளாறு உள்ளது.
உடல் பருமன் என்பது, இன்றைய வாழ்க்கை முறையில், துரித உணவு சாப்பிடும் இளம் வயதினரிடம் மட்டுமல்ல, எல்லா வயதினரிடமும், உடல் பருமன் பிரச்னை உள்ளது. குறிப்பாக, 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், அதிக உடல் எடையுடன் இருக்கின்றனர்.
இதற்கு காரணம், பெரும்பாலான பெண்கள், வீட்டு பொறுப்பாளர்களாக மட்டும் இருப்பர். வீட்டு வேலைகள் மட்டும் தினசரி வழக்கமாக இருப்பதால், உணவு எரிப்புத் தன்மை மெதுவாகக் குறைந்து விடுகிறது.
சாப்பிடும் உணவிற்கு ஏற்ற எரிப்பு சக்தி உள்ளதா என்பதை, பள்ளிப் பருவத்தில் இருந்தே கவனிக்க வேண்டும். வயது, உயரத்திற்கு ஏற்ற எடையுடன் இல்லாமல், கூடுதல் எடையுடன் குழந்தை இருந்தால், காரணத்தை கண்டறிந்து சரி செய்து விடுவது நல்லது. குழந்தை ஒல்லியாக இருந்தால் மட்டுமே டாக்டரிடம் அழைத்து வருகின்றனர்.
குழந்தையின் இயற்கையான உடல் அமைப்பே ஒல்லியாக இருப்பது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒல்லியாக இருக்கிறதே என்று கொழுப்பு சத்துமிக்க உணவுகளைக் கொடுத்து, குண்டாக்கி விடக் கூடாது.
நம் குடும்ப உணவுப் பழக்கம் எப்படி உள்ளதோ, அந்த உணவை குழந்தைக்கு பழக்கினாலே பிரச்னைகள் வராது.
டாக்டர் பி.பிரவீன் ராஜ்,
பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை,
ஜெம் மருத்துவமனை,
கோவை.
97909 66696

