கிண்ணியா குரங்குபாஞ்சான் விவகாரம் இன உறவை சீர்குலைக்க முயற்சிக்க வேண்டாம் - இம்ரான் எம்.பி


முழுமையாக முஸ்லிம்கள் வாழும் கிண்ணியா குரங்குபாஞ்சான் கிராமத்திற்கு பௌத்த பிக்குகள் விஜயம் செய்து அங்குள்ள பழைய இராணுவ முகாம் காணியை பார்வையிட்டுச் சென்றுள்ளமை பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இன உறவை சீர்குலைக்க முயற்சிக்க வேண்டாம் என சம்பந்தப்பட்டோரை நான் கேட்டுக் கொள்கிறேன் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.  

ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவின் மஜீத்நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் குரங்குபாஞ்சான் கிராமம் உள்ளது. இது ஒரு விவசாயக் கிராமமாகும். விடுதலைப்புலிகள் புரிந்துணர்வு உடன்படிக்கை காலப்பகுதியில் சர்வதேசம் வரை இக்கிராமம் பற்றி பேசப்பட்டுள்ளது. இங்கு முழுமையாக முஸ்லிம்களே வாழ்ந்து வருகின்றனர். 

இங்கு இராணுவ முகாமொன்று இருந்து தற்போது இராணுவத்தினர் அகன்று சென்றுள்ளனர். இந்நிலையில் இராணுவ முகாம் அமைந்திருந்த இக்காணியை பௌத்த பிக்கு ஒருவர் தலைமையிலான குழுவினர் அண்மையில் பார்வையிட்டு சென்றுள்ளனர். 

இது அங்கு வாழும் மக்களிடையே சந்தேகத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. பல்லாண்டு காலம் சமுகமாக மக்கள் வாழ்ந்து வரும் பகுதியில் இவ்வாறு செயற்படுவது இன உறவைச் சீர்குலைக்கும் முயற்சியாக அமைந்து விடும். 

எனவே, அதிகாரிகள் என்ற வகையில் கிண்ணியா பிரதேச செயலாளரும், திருகோணமலை அரசாங்க அதிபரும் இது விடயத்தில் உடன் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல கிண்ணியாப் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் ஏ.எல்.அதாவுல்லா எம்.பியும், ஆளுங்கட்சி என்ற வகையில் கிண்ணியாவுக்கான ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளரும் இது விடயத்தில் கவனம் செலுத்தி உயர்மட்டத்தின் கவனத்திற்கு இதனைக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது விடயத்தில் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க நான் தயாராக இருக்கின்றேன். என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.