கிண்ணியா ஆயுர்வேத வைத்திசாலை குறைபாடுகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் இம்ரான் எம்.பி கலந்துரையாடல்


கிண்ணியாப் பிரதேச ஆயுர்வேத வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன், சுதேச வைத்திய திணைக்கள ஆணையாளர் திருமதி எஸ்.சிறிதர் ஆகியோருடன் கலந்துரையாடினார். 

சமீபத்தில் சுகாதார அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது நடுத்தீவு வைத்தியசாலையின் ஆளணி பற்றாக்குறை தொடர்பாக பரிசீலிக்கப்பட்டது. 

இவ்வைத்தியசாலை வாட்களை உள்ளடக்கிய மாவட்ட வைத்தியசாலையாக இருந்த போதிலும் அதற்குத் தேவையான வைத்தியர்கள் மற்றும் ஏனைய ஆளணியினர் இல்லை. இதனால் நோயாளிகள் முழுமையான சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக இம்ரான் எம்.பி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இவ்வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலை என திறந்து வைக்கப்பட்டாலும் இதற்குரிய ஆளணி சாதாரண வைத்தியசாலைக்குரியதாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆளணி அங்கீகாரமின்றியே இது மாவட்ட வைத்தியசாலையாகத் திறக்கப்பட்டுள்ளது. இதனாலேயே வைத்தியசாலைக்குரிய ஆளணியை வழங்க முடியாதுள்ளதாகவும் இது குறித்து ஆளணி ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் தெரிவித்தார். 

கொழும்பு ஆளணி ஆணைக்குழுவோடு பேசி புதிய ஆளணி அங்கீகாரத்தை விரைவு படுத்த தான் நடவடிக்கை எடுப்பதாகவும், அதற்குத் தேவையான தகவல்களைத் தருமாறும் இதன்போது இம்ரான் எம்.பி தெரிவித்தார். 

நடுத்தீவு மற்றும் சூரங்கல் வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடு இருப்பதை இதன்போது சுதேச வைத்திய திணைக்கள ஆணையாளரின் கவனத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கொண்டு வந்தார். அதனைத் தான் கவனத்தில் எடுத்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.