தோட்டப்புற மக்களுக்காக ஒன்லைன் முறையின் கீழான வைத்திய சேவை

 


முனீரா அபூபக்கர்

தோட்டப்புற மக்களுக்காக ஒன்லைன் முறையின் கீழ் வைத்திய சேவைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழுள்ள  புதிய கிராமபுற அபிவிருத்தி அதிகாரசபையினால்  செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதி பதுளை, இதழ்கஸ்ஹின்னவத்த கிராமத்தினை மையமாகக் கொண்டு இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு  அமைச்சர்  பிரசன்ன ரணதுங்க தலைமையில் பத்தரமுல்லை, செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சில் கடந்த (16) தோட்டப்புற வீடமைப்பு பிரிவின் உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு  அமைச்சின் தோட்டப்புற  வீடமைப்பு பிரிவின் கீழ் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த அமைப்பு, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி பொறுப்புச்சபை, புதிய கிராமபுற அபிவிருத்தி அதிகாரசபை  போன்ற நிறுவனங்கள்ஆகியவை அதற்காக செயற்படவுள்ளது.

இலங்கை மக்கள் தொகையில் 5% ஆன மக்கள் தோட்டப்புற மக்களாவார். நாட்டின் மத்திய, ஊவா, சப்ரகமுவ, தென் ஆகிய மாகாணங்களிலும் மற்றும் களுத்துறை மாவட்டம் போன்ற பகுதிகளிலும் தோட்டப்புற மக்கள் வாழ்கின்றார்கள். 

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு  அமைச்சர் கௌரவ. பிரசன்ன ரணதுங்க அவர்களின் ஆலோசனையின் பேரில் செயற்படும் இந்த ஒன்லைன் வைத்திய சேவை செயற்றிட்டம் O - Doc என பெயரிடப்பட்டுள்ளது.  அதற்காக ஒரு குடும்பத்திற்கு மாதாந்தம்  ரூ.100 செலவிடப்படுவதால்; முழு குடும்பத்திற்கும் அதன் மூலம் சேவையை பெற்றுக்கொள்ளலாம். இதன் அடிப்படையில் 24 மணி நேர சேவையில்  150 இற்கும் மேற்பட்ட வைத்தியர் குழுவின் ஊடாக இந்த சேவையை பெறலாம்.

 எதிர்வரும் காலங்களில் இந்த வைத்திய சேவை நாட்டின் அனைத்து தோட்டப்புற பகுதிகளுக்கும் அமைக்கப்பட வேண்டுமென அமைச்சர் உயர்அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.


மேலும் அமைச்சர் கூறியதாவது, ''தோட்டப்புற மக்களின் வாழ்வாதாரத்தின் அபிவிருத்திக்காக அரசு விசேட கவனம் செலுத்துகின்றது.  அதற்காக விசேட பல வேலைத்திட்டங்கள் எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கவுள்ளோம்.  எத்தகைய கடினமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும், தோட்டப்புற மக்களின் நலன்களுக்காக அரசு செயற்படும். தோட்டப்புற மக்களின் வீட்டுவசதி, குடிநீர், சுகாதாரம், கல்வி  உள்ளிட்ட  அனைத்து வசதிகளையும் மேம்படுத்த முன்னுரிமை வழங்கப்படும்.  அத்துடன் எதிர்வரும் இடைக்கால வரவுசெலவு முன்வைத்தல் ஊடாகவும் தோட்டப்புற மக்களின் பொருளாதாரத்திற்கான தேவைகளை செய்வதற்கும் விசேட கவனம் செலுத்த எதிர்ப்பார்த்துள்ளோம்'' என்றார்.

இக்கலந்துரையாடலில் போது நகர அபிவிருத்தி  மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் பிரதீப் ரத்நாயக்க, தோட்டப்புற வீடமைப்பு இராஜாங்க அமைச்சின் முன்னாள் செயலாளர் டி.டி. மாத்தரஆராய்ச்சி, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி பொறுப்புச்சபையின் தலைவர் கனேஷ் திவநாயகம், அதன் பணிப்பாளர் நாயகம் லால் பெரேரா, புதிய கிராமப்புற அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் காந்தி சௌந்தரராஜன், அதன் பதில் பணிப்பாளர் நாயகம் துசாரா பங்கமுவ போன்றோர் உள்ளிட்ட உயர்அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.