நம் வார்த்தைகள் எவ்வளவு முக்கியமானது என்பதனை சில சமயங்கள் உணர்த்தி விடுகிறது. அதிலும் பிள்ளைகள் என்போர் தான் வாழும் சூழலிலுள்ள, முக்கியமாக வீட்டுச் சூழலிலுள்ள பெரியவர்கள் கூறுவதை அறிவுறுத்துவதை செவிமடுத்து எடுத்து நடப்பதைக் காட்டிலும் , அவர்கள்(பெரியவர்கள்) நடந்துகொள்ளும் விதம், பேசும் பாணி, பிறருடன் நடந்துகொள்ளும் விதம், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தல்(வெற்றி, தோல்வி, கோபம்....)என இன்னும் பலவற்றை கண்களால் பார்ப்பதன் மூலமே செயற்படுகிறார்கள்.
மேற்குறிப்பிட்ட விடயங்கள் அப் பிள்ளையைச் சூழ எவ்வாறு காணப்படுகிறதோ பிள்ளை அதுவாகவே மாறுகிறான். உதாரணமாக:- பெற்றோர் மற்றும் பெரியவர்கள் பிள்ளைகளின் முன்னால் தேவையற்ற வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்ளும் பட்சத்தில், பிள்ளையும் நாளடைவில் அத்தகைய வார்த்தைகளை பிரயோகிக்க ஆரம்பித்துவிடுவான். அதன் பின்னர் பிள்ளைகளை திட்டுவதோ அடிப்பதோ பயனற்ற விடயம். எனவே பெற்றவர்கள் உட்பட பிள்ளையைச் சூழ உள்ள அனைவரும் தனது சொற்பிரயோகங்களை ஒழுங்குபடுத்திக்கொள்வதுடன் நல்ல விடயங்களை அவர்களின் மனதில் விதைத்திடுங்கள்.மாறாக "அவன் அடித்தால் நீயும் திருப்பி பதிலுக்கு அடித்துவிடு" எனக் கூறாதீர்கள். அதாவது அவர்களின் சிறந்த நடத்தைகளைப் பலவீனப்படுத்தும் நச்சுக் கருத்துக்களை அவர்களின் பிஞ்சு மனதில் விதைக்காதீர்கள்.
சில ஆரம்பகால உளவியலாளர்கள், "பிள்ளையின் மனம் தெளிவான கரும்பலகை.அதன் மீது எதனையும் எழுதலாம்" எனவும், சிலர் " பிள்ளை களிமண் போன்றது. அதைப் பயன்படுத்தி எவ்வாறான வடிவத்திலும் அமைக்கலாம்" எனவும். சிலர், " குழந்தையின் மனம் வெற்றுக்குடம் போன்றது. அதில் அறிவை அள்ளி ஊற்றி நிறைக்கலாம்." எனவும் பலவாறு கருதினார்கள்.
எனவே பிள்ளைகள் வெற்றுப் பத்திரங்கள் போன்றவர்கள். நாம் அவர்களுக்காக உருவாக்கும் சூழலில் இருந்தே தனக்கான அனுபவங்களை நிரப்பிக்கொள்கிறார்கள். எனவே பிள்ளைகளிற்கென சிறந்த ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்திக்கொடுப்பதுடன் சிறந்த வார்த்தைகளையும் அவர்கள் முன்னே பரிமாறிக்கொள்வோம்!!!!.
ஷைலா பாரூக்

