தொழில்நுட்பமே
வியத்தகு வளர்ச்சியாய்
தலையங்கமாய் மாறிட்ட
இருபத்தோராம் நூற்றாண்டிலும்
அவற்றை அறிய நினைத்தும்
அறிய முடியா இயலாமையில்
நானும் ஒருத்தி
கொஞ்சம் கொஞ்சமாய்
சிறு கையடக்கக் கருவியில்
உலகமும் புதையுண்டு போக
மிச்சமுள்ள வாழ்வையும்
அச்சமற்று படுவேகமாய்
அதனுள் தள்ளியது
அஞ்ச வைக்கும் கொரோனா
பல துறையும்
பவ்வியமாய் இன்று
கைத்தொலேபேசியினில்
தொலைந்திட
கல்வி மட்டும்
அதற்கு விதிவிலக்கு
இல்லையல்லவா???
வெட்டவெளியில்
ஒரு வேளைச் சோற்றையே
பெரும் பாடுபட்டு
வெறுமையான
வயிற்றை நிரப்பிடும்
ஏழை எனக்கு சொந்தமாய்
ஏது கைப்பேசி!!!
வறியோனின்
வரண்டு போன வாழ்வு
செழித்திட கையிலேந்தும்
ஒரேயொரு ஆயுதமாம் கல்வி!!!
அதனைப் பற்றினேன்
இறகு முளைத்த
என் கனவுகளை நனவாக்க
செல்வந்தனின் கைகளிலோ
பணமும் கைத்தொலைபேசியும்
தவழ்ந்திட
ஏழை நம் கைகளில்
தொடுதிரையாய் புத்தகங்கள்
ஏனோ சற்று ஆசையுடனே
தடவிப்பார்க்கிறோம் அடிக்கடி
அத்துனையும் முடக்கிப்போடுகிறது
போதனையைத் தொடர்ந்திட
ஊரடங்கில் உதித்த
புதிய உத்தி
ஆம்!! கைப்பேசியில்
வலம் வரும்
வகுப்பறைகள்
ஊரெங்கும் இப்பேச்சு
வீட்டிலிருந்தே கல்வியா என
வாய் பிளந்து குதூகலிப்போர்க்கு
தேனாய் செவியினில்
பாய்ந்திட
ஏழையெனக்கு தலையிலோர்
பேரிடி!!
ஆசை பல இருந்தும்
ஏழ்மையெனும் அரக்கனின்
அட்டூழியங்களால்
பயிற்சிகள் பலதும்
செய்யாமலே
திட்டு வாங்குகிறேன்
என் பிழையா இது??
தினந்தோறும் கைப்பேசியில்
தம் விழிகளை புதைத்து
என் சக நண்பர்கள்
கல்வியை பருகிட
நானிங்கு தலையணையில்
முகம் புதைத்து விம்மி அழுகிறேன்
கேட்கிறதா என் அழுகுரல்
ஏழ்மைக்கும் எளியதாய்
கல்வி இருந்திட
கைப்பேசியில் அது
முடங்கிப்போனால்
இலவசக் கல்வியும்
எட்டாக்கனியே ஏழை எனக்கு
இதற்கு யார் தருவார் நீதி???
ஆக்கம் : ஷைலா பாரூக்

