அதிகரித்து வரும் கோவிட் - 19 நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ கருவிகள் மற்றும் பண உதவிகளை இலங்கைக்கு வழங்குமாறு, ஐக்கிய அரபு எமிரேட்ஸிலுள்ள இலங்கையர்களிடம் இலங்கைத் தூதுவர் மல்ராஜ் டி சில்வா முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், அபூதாபியில் உள்ள நிதி PJSC நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரர் மொஹமட் ருஸான் பைரோஸ், 100,000 எமிரேட்ஸ் திர்ஹம்களை (54,00,000 இலங்கை ரூபா) “இடுகம” கோவிட் - 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதிக்கு, 03 ஜுன் 2021 ஆம் திகதி நன்கொடையாக வழங்கியதாக, வெளிவிவகார அமைச்சு, 08 ஜுன் செவ்வாயன்று அறிவித்தது.
இந்த நன்கொடையை உத்தியபூர்வமாக வழங்குவதற்காக, பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் பைரோஸ் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ் ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோருக்கு இடையிலான மெய்நிகர் கூட்டமொன்றை, 03 ஜுன் 2021 ஆம் திகதி, தூதுவர் மல்ராஜ் டி சில்வா ஏற்பாடு செய்தார்.
நாட்டுக்கு வெளியே வாழும் இலங்கை புலம் பெயர்ந்தவர்களின்
உதவி எமது தாய் நாட்டுக்குத் தேவைப்படுகின்ற இந்த முக்கியமான நேரத்தில், நாட்டுக்கு தாராளமாக உதவியை வழங்கியமைக்காக பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் பைரோஸ்க்கு, இலங்கை ஜனாதிபதி சார்பில், சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க ஆழ்ந்த பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.