பாகிஸ்தானின் உலகளாவிய முன்னெடுப்புடனான 2021 உலக சுற்றுச்சூழல் தினம்

பாகிஸ்தானின் உலகளாவிய முன்னெடுப்புடனான 2021 உலக சுற்றுச்சூழல் தினம்

“மறுமுறை யோசிப்பது. மீண்டும் உருவாக்குவது. பாதுகாப்பது.”

 உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5 ஆம் திகதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இயற்கையின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகின்ற பெரும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும்.

இவ்வருடமானது “சுற்றுச்சூழல் அமைப்பின் மறுசீரமைப்பு” பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் தசாப்த ஆரம்பத்தை குறிக்கும் நிலையில், இவ்வருடத்துக்கான உலக சுற்றுச்சூழல் தின கருப்பொருளாக “மறுமுறை யோசிப்பது. மீண்டும் உருவாக்குவது. பாதுகாப்பது” என்பது அமைந்திருக்கின்றது.

ஐக்கிய நாடுகள் சபை பகிர்ந்துகொண்டிருக்கும் தகவல்களின்படி, ஒரு சுற்றுச்சூழல் அமைப்பின் இழப்பானது, மனித சமூகம் சற்றும் தாங்கவே முடியாத நிலையில், காடுகள் மற்றும் மக்கு நிலங்கள் போன்ற காபன் தொட்டிகளை இழப்பதாகும். உலகளாவிய பசுமை இல்ல வாயு உமிழ்வுகள் தொடர்ந்தும் மூன்றாவது வருடமாகவும் வளர்ச்சி கண்டுள்ளன. மேலும், பேரழிவு ஏற்படுத்தக்கூடிய காலநிலை மாற்றத்தை நோக்கிய பயணத்தில் புவியும் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

“சுற்றுச்சூழல் அமைப்பின் மறுசீரமைப்பு” என்பது இவ்வழிவை தடுத்து, நிறுத்தி, மீளவும் பழைய நிலையை நோக்கிச் செலுத்துவதாகும் - அதாவது இயற்கையை சுரண்டுவதிலிருந்து, அதை குணமாக்குவதை நோக்கிச் செல்வதாகும். மரம் நடுதல், நகரங்களை பசுமையாக்கல், தோட்டங்களை மீள்உருவாக்கம் செய்தல், உணவுப் பழக்கங்களை மாற்றுதல் அல்லது ஆறுகள் மற்றும் கடற்கரைகளை சுத்தப்படுத்தல் போன்ற பல்வேறு வடிவங்களில் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படலாம்.

இவ்வருடம் சுற்றுச்சூழல் அமைப்பு மறுசீரமைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லும் தினத்தை உலகளவில் முன்னெடுப்பது பாகிஸ்தானாகும்.

இந்த 2021 உலக சுற்றுச்சூழல் தினமானது, காடுகள் முதல் விவசாய நிலங்கள் வரை, மலையுச்சிகள் முதல் ஆழ்கடல் வரை பல பில்லியன் ஹெக்டயார்களை புதுப்பிக்கும் ஒரு உலகளவிய இலக்கான, ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் அமைப்பின் மறுசீரமைப்பு தசாப்தத்தை ஆரம்பிக்கின்றது.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது 1972 இல் உலக சுற்றுச்சூழல் தினத்தை ஆரம்பித்தது. முதலாவது உலக சுற்றுச்சூழல் தினமானது, “ஒரு புவி மட்டுமே” என்ற கருப்பொருளுடன், 1974 இல் அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது.

எதிர்கால சந்ததியின் நலனுக்காக இயற்கையுடன் சமாதானம் செய்துகொள்ளவும், புவிப் பந்தை பாதுகாக்கவும் உலக சுற்றுச்சூழல் தினத்தில், நாம் அனைவரும் கைகோர்ப்போம்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.