கொரோனாவின் 2ஆவது அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இந்தியாவைச் சேர்ந்த முன்னணி உருக்கு நிறுவனமான டாடா ஸ்டீல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “டாடா ஸ்டீல் நிறுவன ஊழியர்கள் யாரேனும் கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்தால், அவரின் குடும்பத்திற்கு ஊழியர் ஓய்வு பெறும் 60 வயது வரையில் அவரின் சம்பளம் முழுமையாக ஒவ்வொரு மாதமும் அளிக்கப்படும்” என தெரிவித்துள்ளது.
அத்துடன், ஊழியரின் குடும்பத்திற்கு மருத்துவக் காப்பீடு மற்றும் தங்கும் வசதிகள் செய்து தரப்படுவதாக டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது.
மேலும், டாடா ஸ்டீல் நிறுவனத்தின் முன்கள ஊழியர் யாரேனும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தால், ஊழியரின் குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளின் கல்விச் செலவை பட்டம் பெறும் வரையில் நிர்வாகமே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,96,427 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 2,69,48,874 ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 19.85 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதுடன், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 24.30 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

