மூக்கிற்குக் கவசம்
என் வாழ்க்கைக்கும் கவசம்
கவசத்திற்குள் வடிகட்டிய
என் சுவாசம்
மூச்சுமுட்ட வைக்கிறது
எதிர்கொள்ளப்போகும்
நாட்களை எண்ணி
பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
சிறிதாய் ஓர் கூலிக்கு
அரிதாய் கிடைத்தவோர் வேலை
மாடாய் உழைத்து
பாடாய்ப் படுகிறேன்
வயிற்றுப் பிழைப்புக்காய்
ஆசைகள் துறந்து
நாடெங்கும் ஊரடங்கு கேட்டு
மனதோரம் போர் தொடங்கும்
விழியோரம் படலை போடினும்
எல்லை தாண்டிடும் கண்ணீர்
யாரும் அறியாமலே
சுற்றும் முற்றும் சுற்ற விட்டு
துடைக்கிறேன் விழிகளை
பசியால் கதறும் குழந்தைகள்
உள்ளதை வைத்து
சமாளிக்கத் தடுமாறியும்
முடியாமல் போராடுமென் தாரம்
அவர் துயர் நீக்க
துணிந்தும் ஏதும் செய்ய
இயலாது கூடிட்டு மனப்பாரம்
கொள்வனவிற்கு ஓர் நாளாம்
சட்டைப் பைக்குள் கையை இட
விரல்களுக்கும் வெறுமைக்கும்
மோதல் ஏமாற்றமே வாழ்வில்
விழிகள் அகல விரிய
வறுமைக்கும் எனக்கும்
மலர்கிறது காதல்
தெருவிலே பலர்
அடுக்கடுக்காய் சாமான்களுடன்
ஏதோ சாதித்த திருப்தி அவர்களில்
ஓரமாய் நான்
வெறுமையான கைகளுடன்
அதிருப்தி என்னில்
தீயாய் சுடுகிறது மனம்
இத்தனைக்குள்ளும்
இற்றுப்போக
இது என்ன நான்
விரும்பியெடுத்த வாழ்வா???
இல்லை இல்லை
விரும்பாமலே இவ் வாழ்க்கை
பிரசவித்த சோதனை!!!
✍️ Saila Farook

