கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் பிராந்திய சிறுவர் பாதுகாப்பு இல்லம் கல்முனை இஸ்லாமபாத் பிரதேசத்தில் (11.02.2021) திறந்து வைக்கப்பட்டது.
சிரேஷ்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் எஸ்.சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழா நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்ஸார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.
அம்பாறை, மட்டக்களப்பு கரையோர பிரதேசங்களில் வசிக்கும் நடத்தை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் நீதி மன்றத்தால் புனர்வாழ்வு அளிப்பதற்கு சிபாரிசு செய்யப்பட்ட சிறுவர்கள் போன்றோர் இங்கு பராமரிக்கப்படவுள்ளனர்.
சுமார் 30க்கும் மேற்பட்ட சிறுவர்களை தங்க வைத்து பராமரிப்பதற்கான சகல வசதிகளும் தற்போது இங்கு ஒழங்குபடுத்தப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் இவ்வாறான சிறுவர்கள் தூர இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். இதனால் பல்வேறு அசௌகரியங்களை எதிர் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வின் போது பிரதேச மட்ட சிறுவர் இல்லங்களுக்கான பாதுகாப்பாக கைகழுவும் இயந்திரங்களும் கையளிக்கப்பட்டன.
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்கள மாகாண ஆணையாளர் திருமதி றிஸ்வானி றிபாஸ், உதவி ஆணையாளர் சரணியா சுதர்சன், கல்முனை சிறுவர் நன்னடத்தை பொறுப்பு அதிகாரி ரி.மதியழகன், களுவாஞ்சிக்குடி பொறுப்பு அதிகாரி எம்.என்.எம்.றிபாஸ், உட்பட திணைக்கள உத்தியோகத்தர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.