கொரோனாவை முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த முதல் நாடாக நியூசிலாந்து தடம் பதித்துள்ளது.
சீனாவில் ஹூபேய் மாகாணத்தில் வுஹான் நகரில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவரும் பரவி வல்லரசுகள் முதல் வறிய நாடுகள் வரை திண்டாட வைத்திருக்கிறது.
ஒரு சில நாடுகள் படுமோசமாகப் பாதிக்கப்பட்டு இன்று வரை கஷ்டப்பட்டு வருகின்றன. அதேவேளை சில நாடுகள் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மெது மெதுவாக வழமைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் நியூஸிலாந்து தற்போது தனது நாட்டில் இருந்த இறுதி கொரோனா நோயாளியையும் குணப்படுத்தியுள்ளது.
அத்துடன் அங்கு கடந்த சில நாட்களில் எந்தவொரு புதிய கொரோனா தொற்றாளரும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நியூஸிலாந்தின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் விஷேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் " இப்போதைக்கு எங்கள் நாட்டு எல்லைகள் மூடப்பட்டே இருக்கும். நாங்கள் வைரசை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். எங்கள் எல்லைகள் எங்களுக்கு முதல் கேடயமாக இருக்கின்றன. அத்துடன் எல்லைகள் மூடப்பட்டிருக்கும் எல்லைகளில் நிர்வகிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடரும்.
எல்லைகள் மூடப்பட்டிருப்பது மிக முக்கியமானது. ஏனெனில் நாங்கள் மீண்டும் ஆரம்ப நிலைக்குச் செல்ல விரும்பவில்லை. தற்போதுள்ள நிலையிலேயே இருக்க விரும்புகிறோம்.
அத்துடன் குறைந்த எண்ணிக்கையிலான வழக்குகளைக் கொண்டுள்ள அவுஸ்திரேலியாவோடு மீண்டும் பயணத்தை தொடங்குவது குறித்து கலந்துரையாடி வருகின்றோம்." என்று தெரிவித்துள்ளார்.

