தென் மேற்கு பருவப்பெயர்ச்சி மழைக்கால நிலையை அடுத்து ஏழு மாவட்டங்களில் டெங்கு நுளம்பு அதிகரிக்கும் அனர்த்த மாவட்டங்களாக தேசிய டெங்கு தடுப்பு பிரவு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் டெங்கு நுளம்புகளில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கு நீர் தேங்கும் இடங்களையும் சுற்றாடலையும் சுத்தமாக வைத்திருப்பது தொடர்பில் பொது மக்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என இந்த பிரிவு வலியுறுத்தியுள்ளது.
டெங்கு நுளம்புகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்வது தொடர்பிலும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. டெங்கு நுளம்புகள் காலை 6 மணி தொடக்கம் முற்பகல் 11 மணி வரையிலும் பிற்பகல் 3 மணி தொடக்கம் இரவு 7 மணி வரையிலுமான காலப்பகுதியில் தாக்கும்.
இதனால் பகல் வேளைகளில் முழு உடலையும் உள்ளடக்கிய வகையில் ஆடைகளை அணிவதுடன் நுளம்புத் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்காக சருமத்தில் கிறீம்களை பூசிக்கொள்ள வேண்டும்.
டெங்கு நோயாளர்கள் மற்றும் டெங்கு நோய் என சந்தேகிக்கப்படும் நோயாளர்களிடம் இருந்து மற்றவரிடம் டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்காக டெங்கு வலைகளை பயன்படுத்த வேண்டும்.
எவருக்காவது கடும் காய்ச்சலுடன் தலைவலி, கண் எரிச்சல், உடம்பு வலி, சருமத்தில் சிவப்பு நிற தழும்பு ஏற்படுதல் உள்ளிட்ட இரண்டு நோய் இலட்சணங்கள் அல்லது அதற்கு மேலும் காணப்படுமாயின் அது டெங்கு நோயாக இருக்கக் கூடும். உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அல்லது பொருத்தமான வைத்தியரிடம் சென்று சிகிச்சையை பெற்றுக்கொள்வது சிறந்ததாகும்.

