திருகோணமலை மாவட்டத்தில் குறிஞ்சாக்கேணி பிரதேச செயலகம் கிடைக்காமைக்கு முஸ்லிம் காங்கிரசே மிக முக்கிய காரணம்.


திருகோணமலை மாவட்டத்தில் குறிஞ்சாக்கேணி பிரதேச செயலகம் கிடைக்காமைக்கு முஸ்லிம் காங்கிரசே மிக முக்கிய காரணம்.-இம்ரான் 

திருகோணமலை மாவட்டத்தில் குறிஞ்சாக்கேணி பிரதேச செயலகம் கிடைக்காமைக்கு முஸ்லிம் காங்கிரசே மிக முக்கிய காரணம்.குறிஞ்சாக்கேணி பிரதேச செயலகத்தை முஸ்லிம் காங்கிரஸ் திட்டமிட்டே வெட்டியது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.இது தொடர்பாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் முகநூலில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் முகமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,

1994 முதல் 2000 ஆம் ஆண்டுவரை முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் மிக முக்கிய பங்காளியாக இருந்தது. இக்காலப் பகுதியில் புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கான சிபார்சுகளை செய்வதற்கு ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது.


கிண்ணியாவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலர் இரவு பகலாக பாடுபட்டு குறிஞ்சாக்கேணி பிரதேச செயலகத்திற்கான பிரேரணையை தயாரித்து இந்த ஆணைக்குழுவுக்கு அனுப்பினர். சிலர் கொழும்பு ஆணைக்குழு அலுவலகம் சென்று இக்கோரிக்கையின் நியாயங்களை முன்;வைத்திருந்தனர். 


இந்த நியாயங்களை ஏற்றுக்கொண்ட ஆணைக்குழு அதன் சிபார்சு அறிக்கையில் குறிஞ்சாக்கேணி பிரதேச செயலகத்தையும் உள்ளடக்கியிருந்தது. எனினும், அரசோடு ஒட்டியிருந்த முஸ்லிம் காங்கிரஸ் இதனைக் கவனத்தில் கொள்ளவில்லை.

இக்காலப்பகுதியில் தான் அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது, இறக்காமம், நாவிதன்வெளி போன்ற பிரதேச செயலகங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகமும் புதிதாக உருவாக்கப்பட்டன. இவற்றின் பின்னணியில் முஸ்லிம் காங்கிரசே இருந்தது. 

எனினும், முஸ்லிம் காங்கிரசுக்கு திருகோணமலை மாவட்டத்தில் அக்கறை இருக்கவில்லை.  இதனால் திருகோணமலை மாவட்ட மக்களை அது புறக்கணித்தது. அந்த வகையிலேயே குறிஞ்சாக்கேணி பிரதேச செயலகமும் கிடைக்காமல் போனது. இதேபோல தோப்பூர், புல்மோட்டை பிரதேச செயலகங்கள் விடயத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் எந்தவித அக்கறையும் காட்டவில்லை. 

அம்பாறை மாட்டத்தில் 3 புதிய பிரதேச செயலகங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 1 புதிய பிரதேச செயலகமும் பெற்றுக் கொடுத்த முஸ்லிம் காங்கிரஸ் ஏன் திருகோணமலை மாவட்டத்தில் வாய்ப்பு இருந்த 1 பிரதேச செயலகத்தையாவது பெற்றுக் கொடுக்கவில்லை என்று கேட்க விரும்புகின்றேன். 

இதுதான் போனாலும் பரவாயில்லை. சகோதர பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் 2000 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பெரும்பாலான காலப்பகுதி ஆளுங்கட்சிப் பக்கமே இருந்துள்ளார். அவர் கூட இந்த விடயத்தில் போதிய அக்கறை காட்டவில்லை. அவ்வாறு காட்டியிருந்தால் ஏதாவது ஒரு புதிய பிரதேச செயலகம் திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை உருவாகியிருக்கும். 

இப்போதும் ஒன்றும் குறைந்து விடவில்லை. சகோதர பாராளுமன்ற உறுப்பினருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. போர்ட் சிட்டி சட்ட மூலத்திற்திற்கு வாக்களிக்க உள்ள அவர் இந்த பிரதேச செயலகங்கள் தொடர்பான கோரிக்கையை அரசிடம் முன்வைத்து புதிய பிரதேச செயலகங்களை உருவாக்கலாம்.

அவர் முயற்சித்தால் நிச்சயமாக இந்த பிரதேச செயலகங்களைப் பெற்றுக்கொள்ளலாம். ஏனெனில் போரட் சிட்டி சட்ட மூலத்தை வென்றெடுப்பதற்கு அரசு எதுவும் செய்ய தயாராயிருக்கின்றது. 

இந்த வாய்ப்பை உரிய முறையில் அவர் பயன்படுத்துவாரா அல்லது 20க்கு வாக்களித்ததைப்போல சமுகம் சார்ந்த கோரிக்கை எதுவுமின்றி வெறுமனே கையை உயர்த்துவாரா என்பதை இன்னும் சில நாட்களில் சகல மக்களும் தெரிந்து கொள்ள முடியும். 

தேர்தல் காலங்களில் தேர்தல் மேடைகளில் குறிஞ்சாக்கேணி, தோப்பூர், புல்மோட்டை பிரதேச செயலகங்கள் தொடர்பாக பேசி மக்களை உசுப்பேற்றி வாக்குப் பெறும் ஏமாற்று வேலையையே முஸ்லிம் காங்கிரஸ் செய்து வருகின்றது என்பதை சகல மக்களும் விளங்கியே வைத்துள்ளார்கள். 

இது தான் உண்மை. இந்த உண்மையை மூடி மறைத்து பிறர் மீது குற்றம் சுமத்தி தப்பித்துக்கொள்ள எனது சக பாராளுமன்ற உறுப்பினர் முயற்சி எடுப்பது குறித்து நான் மிகவும் கவலையடைகின்றேன். எனினும், மக்கள் இந்த விடயத்தில் தெளிவாக உள்ளனர். 

இவரது சகல கேள்விகளுக்குமான பதில் என்னால் முன்வைக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.