எழுதிவைத்த ஆண்டவனே
தந்துவிடு நல்வாழ்வை எமக்கு!-தங்கத் தலைவரினை இழந்துவிட்டு தவிக்கின்ற எம்சமூகம் தலையிழந்து முண்டமெனக் கிடக்கு!
தலைவர்நாம் என்றவர்கள் தறுதலைகள் முன்னாலே தலைகவிழ்ந்து நிற்கின்றார் எதற்கு-?அவர்
தலையாட்டி பொம்மைகள்போல் எமதினத்தை அடகுவைத்தால் தருவாரே சிலஎலும்பு அதற்கு!
தலையில்லாத் தலைகளினை தலைவரென நினைத்ததற்காய்
தலையிடிதான் எங்களுக்குப் பரிசு!-பதவிக்காய்
தலைசொறிந்து பல்லிளிக்கும் தலைவர்களால் தடுமாறும் எம்வாழ்க்கை தரிசு!
தலைதடவி கண்களிலே கண்கெட்டோர் கைவைக்க
தலையணையில் எம்தலைகள் இருக்கு!-தங்கள் தலைதப்பி னால்போதும் என்கின்ற கோழையரை தேர்ந்தெடுத்த நாங்கள்தான் கிறுக்கு!
தலைப்பிறையை மேகத்தால் தகர்த்தெறிய முடியாது
தலைவர்களே கொண்டிடுவீர் ஒப்பு!-உங்கள் தலைகளினை காப்பாற்ற கண்ணிருந்தும் குருடர்களாய் தவறுகளை பார்த்திருத்தல் தப்பு!
தலையில்லா முண்டங்களாய் மாறிவிட்ட எம்மவர்க்கு தலையாக ஒருதலைவன் எழுவான்!-அவன்
தலைவரவர் சுவடுகளில் தயங்காமல் நிதம்நடக்க தளையொடிந்து சிரிக்குமெங்கள் எழுவான்!!
கவிஞர் அஸ்மின்

