நெருக்கடி மிக்க இக்கால கட்டத்தில் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துவோம்
✍🏻Muneera Ghani
பொதுவாக ஓர் பிரச்சினையை தலையில் வைத்துக் கொண்டாடும் நாம், அதை விடப் பெரியதோர் பிரச்சினைக்கு முகங் கொடுக்க நேரிடும் போது முன்னைய பிரச்சினையை மறந்தே போகிறோம். அந்த வகையில் கொரோனாவின் தாக்கங்கள் உலகையே ஆட்கொண்டிருக்கும் இந்நாட்களில் நாம் எத்தனையோ இடர்களை சந்தித்த போதும் அவை எமக்கு சாதாரணமானவையாகவே எண்ணத் தோன்றும். அத்தகைய பிரச்சினைகளில் ஒன்றுதான் இன்றைய காலங்களில் நிலவி வரும் புவி வெப்பமும், புவியின் வரட்சியும்.
தொடர்ந்தேர்ச்சியான உஷ்ண நிலையானது புவியில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிவோம். பூமி வரண்டு போகும், நீர் வளம் குன்றும், இயற்கையின் செழுமை படிப்படியாக குறையும், விளைச்சல்கள் குறையும், ...இதன் மூலம் மனிதர்களும், ஏனைய உயிரினங்களும் ஏராளமான பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்க நேரிடும். இவற்றுள், எமது நாட்டின் பல பாகங்களில் இப்போதைக்குள்ள பிரச்சினைகளுள் ஒன்றுதான் நீர் பற்றாக்குறை.
நீர் பற்றாக்குறையானது, பிரதான மாவட்டங்களை வெகுவாகப் பாதிக்காத போதிலும், சில மாவட்டங்களின் உட்பிரதேசங்களில் வாழும் மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அன்றாட தேவைகளுக்கோ ஏன் குடிப்பதற்கு கூட நீரைத் தேடி அலைய வேண்டிய கட்டத்தில் வாழ்க்கையைக் கொண்டு செல்கின்றனர். கொரோனாவின் மரணபீதி ஒருபக்கம் அச்சுறுத்த, நீர்த்தட்டுப்பாட்டினால் அல்லோல கல்லோலப் பட்டு நிற்கின்றனர். இப்பிரதேசங்களில் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் வசிக்கும் வீடுகளில் இன்றைய நாட்களின் நிலை மிகவும் கவலைக்கிடமானதாகவே உள்ளது. வெளியில் செல்லாதே என பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள காவற்துறையினர் கட்டளையிட, நீருக்கு வழியின்றி தட்டுத்தடுமாறி நிற்கின்றனர்.
எத்தனை நாட்கள் தான் குளிக்காமலும், ஆடைகளைத் துவைக்காமலும் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருப்பது. எனவே குளிப்பதற்காக ஆறுகள், ஓடைகள், குளங்களைத் தேடி வெகு தொலைவுக்குச் செல்ல வேண்டியிருந்தாலும் வேறு வழியின்றி அவற்றையே நாடுகின்றனர். நோயின் கொடூரம் அதிகரித்துச் செல்லும் இக்கால கட்டத்தில் கூட, வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்க முடியாத நிலை அவர்களுக்கு.
சிற்சில பிரதேசங்களில் பிரதேச அலுவலர்கள் வாயிலாக, பவுசர் வாகனங்கள் மூலம் வாரமொரு முறை வந்து நீர் வழங்கப்பட்டாலும், அவ்வாறு வரும் வாகனங்களிலிருந்து குடங்களினாலும், கொள்கலன்களாலும் எத்தனை நாளைக்குத் தேவையான நீரை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்து வைப்பது சாத்தியமாகும்?
நிலைமை இப்படியிருக்க, தீவின் ஒரு சில பகுதிகளில் இப்படி ஓர் பிரச்சினை இருப்பது கூட மக்களுக்குத் தெரியாமலிருப்பது உண்மையே.
எனவே சகோதரர்களிடம் வினயமாக வேண்டிக் கொள்வது என்னவெனில், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம். வீண்விரயத்தைத் தடுப்போம். வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்புப் பெற, அடிக்கடி கைகளைக் கழுவும் நாம், தேவையற்ற நேரங்களில் நீர்க்குழாய்களை மூடியே வைப்போம். பாதையோரங்களில் மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள பொது நீர்க்குழாய்களை அநாவசியமாகத் திறந்து வைப்பதைத் தவிர்ப்போம். திறந்து வைத்துள்ள நீர்க்குழாய்களில் வடிந்து வீழ்வதைக் காணும் பட்சத்தில் அவற்றைத் தயங்காது மூடியும் விடுவோம். அத்துடன் நீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப் படுவதால், மின்சாரத்தையும் சிக்கனமாக, முறையாகப் பயன்படுத்துவோம்.
அனைத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலமே, தற்போது எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு படிப்படியாக மேலெழ முடியுமாக இருக்கும்.
*"உண்ணுங்கள் பருகுங்கள்; வீண் விரயம் செய்யாதீர்கள்"*
✍🏻Muneera Ghani
Hemmathagama.


